கொரோனா போருக்கு இடையே அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது 4 வயது தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்றப் போராடிய நிகழ்வு உலகெங்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் பிரிட்ஜர் வாக்கர் என்ற 6 வயது சிறுவன், தனது 4 வயது தங்கையை நாய் ஒன்று கடிக்க வருவதைக் கண்டு அதன் முன்பு பாய்ந்து தடுத்திருக்கிறான். அப்போது அந்த நாய் கடித்ததில் பிரிட்ஜரின் முகம், தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தனது சகோதரிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு அரணாக இருந்திருக்கிறான் பிரிட்ஜர் வாக்கர். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் 90 தையல்கள் போடப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பிரிட்ஜர் வாக்கரின் அத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையாகப் பதிவிட்டதுடன், தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்றியது குறித்து பிரிட்ஜர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “அப்போது யாரேனும் இறந்தாக வேண்டும் என்றால் அது நானாகவே இருக்கட்டும் என நினைத்தேன்” அச்சிறுவன் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோவாக செயல்பட்டிருப்பதால் அவெஞ்சர்ஸ் படங்களின் சூப்பர் ஹீரோக்களான ராபர்ட் டவுனி ஜே.ஆர்., கிறிஸ் எவன்ஸ், டாம் ஹாலண்ட், மார்க் ருஃபல்லோ போன்றோரையும் டேக் செய்து இந்நிகழ்வை உலகறியச் செய்துள்ளார்.
இதனையடுத்து, கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் எவன்ஸ் பிரிட்ஜர் வாக்கரை பாராட்டி, புகழ்ந்ததோடு அச்சிறுவனுக்குப் பரிசாக கேப்டன் அமெரிக்காவின் கேடயம் மற்றும் உடையை அனுப்பியுள்ளார். மேலும், பிரிட்ஜர் ஒரு உண்மையான வீரர் என்றும் வீடியோ செய்தியில் பாராட்டியுள்ளார் கிறிஸ் எவன்ஸ்.
இதேபோன்று, குழந்தைகளுக்குப் பிடித்தமான ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடித்த டாம் ஹாலண்டும் வீடியோ கால் வாயிலாக சிறுவன் பிரிட்ஜர் வாக்கருடன் பேசியுள்ளார். இதனையும் அச்சிறுவனின் அத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது சிறுவன் குறித்த செய்திகளும், வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.