தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை என்று மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் அர. சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார்.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு வதந்திகள் அரசுக்கு எதிராக பரப்பும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஓவ்வொரு குற்றச்சாட்டுகளையும் ஒவ்வொரு முறையும் முறியடித்து, மக்கள் பணியில் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது இந்த சூழலில் தற்போது பாமக நிறுவனர் இராமதாஸ் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு இல்லை என்று அவதூறாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கைக்கு தற்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

துவரம் பருப்பு விநியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்றும் துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் கூறியிருக்கிறார்.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு நாளது தேதி வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (27,53,606 கிலோ) சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.

சென்னை மண்டலங்களைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20,55,811 கிலோ துவரம் பருப்பில் 14,75,019 கிலோ வழங்கப்பட்டு நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (2,68,122 கிலோ) சேர்த்து 87% துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்குப் பொதுமக்களுக்கு விநியோகித்திட அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த மூன்று மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் இன்று (22.11.2024) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆதலால், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இனிமேலாவது மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சரியாக விவரங்களைத் தெரிந்துகொண்டு அறிக்கை வெளியிட்டால் நல்லது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories