கோயம்புத்தூரில் பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக இன்று (நவ.22) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியது வருமாறு :
நாம் தமிழர் கட்சியினர் ஒட்டு மொத்தமாக சீமான் மீது அதிருப்தியாக இருக்கிறோம். இப்போது கோவை மாவட்டத்தில் இருந்து 20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறியுள்ளோம். மக்கள் எங்களை அண்ணியமாக பார்க்கிறார்கள். சீமானின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இனி எந்த கட்சியில் இணைய போகிறோம் என இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியை விட்டு வெளியேறுவது சீமானுக்கு தெரியாது. அவரிடம் இன்னும் தெரிவிக்கவில்லை.
சீமானை நாங்கள் தவறாக எதுவும் சொல்லவில்லை. கட்சியை கடந்து நண்பர்களாக பயணிக்க ஆசை படுகிறோம். கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. நாம் தமிழர் இரண்டாவது கட்சியாக பிரிய வாய்ப்பு இல்லை. திமுக வலிமையான கட்டமைப்பில் நன்றாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தியில் தான் உள்ளார்கள்.
நாம் தமிழர் கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் என்று யாரும் இல்லை. எதையும் செய்ய முடியவில்லை. சீமான் ஹிட்லர் போன்று செயல்படவில்லை. வெற்றியை நோக்கிய பயணம் இல்லை. சீமான் எடுக்கும் முடிவில் எங்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை" என்றனர்.
நாம் தமிழர் கட்சியில் பல்வேறு முரண்பாடுகள் முன்பிருந்தே இருக்கும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு ஏற்பட்டுள்ளது. சீமானின் நாக்கை அடக்காத பேச்சுக்கு கண்டனங்கள் பிற கட்சியினரிடம் இருந்து எழுந்து வந்த நிலையில், தனது சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த அக்.1, 2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு சீமானுக்கு எதிராக போர் கொடி தூக்கி, சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியை விட்டு விலகினர். இந்த சூழலில் தற்போது கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.