காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எஃப் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த தாக்குதலின் போது, பஷீர் அகமது என்ற முதியவர் பலியானதோடு, அந்த முதியவர் மீது சிறு குழந்தை உட்கார்ந்திருந்த புகைப்படமும், அந்தக் குழந்தையை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் சமாதானப்படுத்தி தூக்கிச்செல்லும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த முதியவரை சி.ஆர்.பி.எஃப் வீரர்களே கொன்றிருக்கிறார்கள் என அவரது மனைவியும், குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை சி.ஆர்.பி.எப். கூடுதல் தலைமை இயக்குநர் ஜுல்பிகர் அலி மறுத்ததோடு, எங்கள் தரப்பில் இருந்து மூவர் காயமடைந்தும், ஒருவர் பலியாகியும் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், பஷீர் அகமது மீது அமர்ந்திருந்த குழந்தையே எங்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளது எனக் கூறுகிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள் அந்த குழந்தையிடம் விசாரித்தபோது, “தாத்தா போலிஸாராலேயே சுடப்பட்டார். காரில் சென்றுகொண்டிருக்கும்போது தாத்தாவை போலிஸ் சுட்டது” எனக் கூறியுள்ளது.
பா.ஜ.கவினரோ சமூக வலைதளத்தில் வைரலான இந்தப் புகைப்படங்களுக்கு புலிட்சர் விருதெல்லாம் கிடைக்காது. உயிரிழந்தவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவரல்ல. பயங்கரவாதிகள்தான் கொன்றிருக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், வைரல் புகைப்படங்களை எடுத்தது பாதுகாப்பு படையைச் சேர்ந்த புகைப்படக்காரரராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படும் வேளையில், தனது தாத்தாவின் உடலை விட்டு அந்த குழந்தை விலகிச் செல்லும் புகைப்படத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் இருப்பது புலப்படுகிறது. அதில் அவர் அந்த குழந்தையை தன்னை நோக்கி வரச்சொன்னாரா அல்லது விலகிச்செல்ல பணித்தாரா என்பது தெளிவாக இல்லை.
மேலும், குழந்தையை முதலிலேயே காப்பாற்றாமல் எதற்காக போட்டோ எடுப்பதற்காக நேரம் செலவிட வேண்டும் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, “தாக்குதலில் ஈடுபடும்போது வீரர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்வது தவறு. தொலைபேசி எடுத்துச்செல்லக் கூடாது என்பதை ஐ.ஜி.பி விஜய் குமார் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில் இது அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறலாம். கடந்த 2018ம் ஆண்டு கடமை நேரத்தில் செல்போன் உபயோகித்ததால் பல பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.