சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ’ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் துவக்க விழா சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து 20க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தார். ஊட்டச்சத்து குறைந்த தாய்மார்களுக்கு இந்த திட்டம் பெரும் பலன் அளிக்கிறது. ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். 76,705 பேருக்கு இரண்டாம் கட்டமாக இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 2517 பேர் இந்த ஊட்டச்சத்து பெட்டகம் பெறுகிறார்கள். சைதாப்பேட்டையில் மட்டும் 46 நபர்கள் இந்த பெட்டகம் பெறுகிறார்கள்.
உலக நாடுகளுக்கு முன்மாதிரியான திட்டங்ளை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தாய் சேய் நல குறியீடு பின்தங்கிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஆயிரம் முதல் நன்னாட்களை கண்டறிந்து, அந்த குழந்தையின் நல்ல வளர்ச்சிக்காக தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் தவணையாக கொடுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? இல்லை எரிச்சல் பழனிசாமி என்று தெரியவில்லை . எரிச்சல் தாங்காமல் பொறாமை கூடி உள்ளதால் எடப்பாடி பழனிசாமி இருப்பை தக்க வைத்துக் கொள்ள இப்படி பேசி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக கோணிப்பை, கட்டப்பை கொடுப்பது போன்ற சிறிய நிகழ்வுகளை வைத்து ஒரு அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். தமிழ்நாட்டின் மருத்துவத்துறை சிறப்பாக விளங்குவதால்தான் 600க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள், ஒரு ஐநா விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம்.
அ.தி.மு.க ஆட்சியில் 19 மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்தது. ஆனால் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 27 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்துவது என்றால் அ.தி.மு.க ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்லாமல், ரூ.1018 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.