முரசொலி தலையங்கம்
23.11.2024
திண்டுக்கல் சீனிவாசனின் வாக்குமூலம் !
அ.தி.மு.க.வில் இருப்பவர்களில் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது உண்மையைப் பேசி விடுவார் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.
‘அம்மா 65 நாட்கள் அப்பலோவில் என்ன செய்தார்? இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று நாங்கள் சும்மா பொய் சொன்னோம்’ என்று சொல்லி உண்மையை ஒப்புக் கொண்டவர் திண்டுக்கல் சீனிவாசன் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இதோ அவர், இன்னொரு வாக்குமூலத்தை அவிழ்த்துள்ளார்.
“ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர். சசிகலா, தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான். அவர்கள் ஜெயலலிதாவுடன் இருந்ததால், அவர் ஆட்சியில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறினர். அந்த ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே! அதிகாரத்திற்கு ஆசைப்படலாமா?” என்று – சசிகலா, தினகரனுக்கு நாகையில் நடைபெற்ற அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருக்கிறார்.
“ஜெயலலிதா ‘Born With Silver spoon’. அவருக்கு நல்லது எது கெட்டது எது என்று எதுவும் தெரியாது. அப்படி இருந்த ஜெயலலிதா வீட்டிற்குள் சசிகலா குடும்பம் புகுந்து 1000 பேருக்கு மேல் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்” என்பது திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.
ஜெயலலிதா ‘Born With Silver spoon’ – என்ற ஆராய்ச்சிக்குள் நாம் இப்போது போகத் தேவையில்லை. ஆனால் அவருக்குத் தெரியாமல் சசிகலா, தினகரன் வகையறாக்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நம்புவது, ஜெயலலிதாவையே இழிவுபடுத்துவதாகும். ‘இரும்பு மனுஷி அம்மாவுக்குத் தெரியாமல் இவர்கள் எல்லாம் முறைகேடுகளைச் செய்து கொண்டிருந்தார்களா?’ என்ற கேள்வி மிகமிகச் சாதாரணக் கேள்வி ஆகும்.
தனது வீட்டில் இருந்து கொண்டு, தன்னை வைத்து இத்தனை பேர் முறைகேடு செய்வது தெரியாமல் ஜெயலலிதா இருந்திருக்க முடியுமா? அப்படி இருந்தால், இதுவரை அவர்கள் கட்டமைத்த ஜெயலலிதா என்ற பிம்பமே காற்றடைத்த பலூன் ஆகிவிடும். பாவம், சீனிவாசன் முழு உண்மையில் 30 விழுக்காட்டை குறைத்துச் சொல்லி இருக்கிறார். ஆனால் இவை அனைத்தும் ஜெயலலிதா அறிய நடந்தவை என்பதே நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகும். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, அளித்த தீர்ப்பு இன்னமும் இருக்கிறது.
“ஊழலுக்கு எதிராக நீதிமன்றங்கள் மென்மையான போக்கை ஒரு போதும் கடைப்பிடிக்காது. நீங்கள் செய்திருப்பது கருணை காட்டக்கூடிய குற்றமல்ல. இது மக்களுக்கு எதிரான குற்றம். அதிகபட்சமாக 7 ஆண்டு கால சிறைவாசம் தர வேண்டும். எனினும் உங்களுடைய வயதையும், 18 ஆண்டு வழக்கின் தாமதத்தையும் கருத்தில் கொண்டு 50 சதவிகித தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய தண்டனைச் சட்டம் 109 இன் படி குற்றத்துக்கு உடந்தை என்பதும் குற்றமாகிறது. எனவே நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் அளிக்கிறேன்” – இதுதான் நீதிபதி குன்ஹாவின் இறுதி வரிகள்!
இந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நடந்தது.“எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துக்களை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள். எவ்வளவு பெரிய ராஜதந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை.
பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது”– என்று நீதியரசர்கள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் அமர்வு தீர்ப்பளித்தது.
ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவர்கள் ஊழல் செய்திருக்க முடியுமா? உச்சநீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா? “மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நடவடிக்கையில் இருந்து தான் தப்பித்துக் கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக் கொண்டார். இவர்கள் கூட்டுச் சதியால் தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள். எனவே ஜெயலிதாவுக்குத் தெரியாமல் நடந்தது என்பதெல்லாம் கப்சா கதைகள். ‘இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார்’ என்பது போன்ற பூச்சுற்றல்கள்தான்.
ஜெயலலிதா ‘அறிய’ நடந்தவையே இவை. எனவே இன்று பழனி – பன்னீர் – சசி – டி.டி.வி. நாடகங்கள் அனைத்தும் பிரிப்பதில் ஏற்பட்ட மோதலே தவிர வேறல்ல!
திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் சில மாதங்கள் கழித்து மேலும் சில உண்மைகளைச் சொல்வார், ஒப்புக் கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம் தானே?!