கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு சென்று, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி அவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிறகு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர் பாலாஜி, இன்று சாதாரண பிரிவிற்கு மாற்றப்படுவார். மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மருத்துவர் பாலாஜி திறமையான மருத்துவ சிகிச்சை அளிக்க கூடியவர் கடந்த காலங்களில் மருத்துவ சிகிச்சையில் சாதனை படைத்துள்ளார். கலைஞர் மருத்துவமனையில், அவர் அளித்த மருத்துவ சிகிச்சையில் தவறு எதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் மருத்துவ சேவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காவல் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கூட்டு தணிக்கை செய்ய வேண்டும் என்றும்; சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் வருபவர்களை பரிசோதிக்கும் விதமாக metal detector மூலம் சோதிக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 2 மருத்துவமனையில் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
மேலும் நோயாளிகளுடன் வரும் பார்வையார்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுடன் வரும் பார்வையார்களுக்கு அடையாட அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
அதன் படி, சிவப்பு நிற அடையாள அட்டை - தீவிர சிகிச்சை பிரிவு!
மஞ்சள் நிறம் - சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு!
பச்சை சிறப்பு - அறுவை சிகிச்சை பிரிவு!
நீலம் - பொது மருத்துவம் என நான்கு வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
ஒரு நோயாளியுடன் வரும் 2 பேருக்கு வழங்கப்படும். இந்நடைமுறையை படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 47 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 320 வட்டார மருத்துவமனைகளிலும் செயல்படுத்த உள்ளோம்” என தெரிவித்தார்.