மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன் என கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு கழக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி
மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, உங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் நாள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகும். இதுவரை பார்வையிட்ட மாவட்டங்களைக் காட்டிலும் எங்கள் மாவட்டத்தில் கழகப் பணிகளை எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம் பாருங்கள் தலைவரே என்று பெருமையுடன் உங்கள் களப்பணிகளை என் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவரவர் மாவட்டத்திற்கான அரசின் திட்டங்களை வலியுறுத்திப் பெறுவீர்கள் என்பதை உங்களில் ஒருவனான நான் நன்றாக அறிவேன்.
நவம்பர் 14-ஆம் நாள் மாலையில் சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றபோது, கழகத்தின் முதன்மைச் செயலாளர் -மலைக்கோட்டை மாவட்டத்தின் மாவீரர் கே.என்.நேரு அவர்கள் உள்ளிட்ட திருச்சி மாவட்டக் கழக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்குப் பயணமானேன். வழியெங்கும் மழைத்தூறல். என் மனதிலோ எத்தனையோ நினைவுச் சாரல்.
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வைத் தொடங்கி, அதன்பின் கழகத்திற்காகக் கொள்கைப் பிரசார நாடகங்களை நடத்தியபோது, ஜெயங்கொண்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே அடிக்கடி பிரசார நாடகத்தில் பங்கேற்றிருக்கிறேன். இளைஞரணிச் செயலாளராகத் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் இருவண்ணக் கொடிகளை ஏற்றிவைத்து, படிப்பகங்களைத் திறந்து வைத்து, கிளைகளை உருவாக்கிய நேரத்திலும் ஜெயங்கொண்டத்திற்கு வந்திருக்கிறேன். அந்த ஊர்க்காரரான கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர் அண்ணன் வெற்றிகொண்டானுடன் மேடைகளில் பேசியிருக்கிறேன்.
சிறிய ஊராக இருந்த ஜெயங்கொண்டத்தில் மிகச் சிறிய பயணியர் விடுதி உண்டு. அங்கு பல முறை தங்கியிருந்த நினைவுகள் வந்து சென்றன. அந்த விடுதியைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பாக மாற்றி அமைத்திருக்கிறார். பொதுவாக, முதலமைச்சர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களே கூட அரியலூரில் சற்று பரந்த - விசாலமான பயணியர் விடுதியில் தங்குவதுதான் வழக்கம். ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா என்பதால், ஜெயங்கொண்டத்திலேயே தங்கலாம் என்று நான் சொல்லிவிட்டேன். சிறிய விடுதியாக இருந்தாலும் மனதுக்கு இனிய விடுதியாக அது இருந்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயங்கொண்டத்தில் தங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தது. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தானே, அரியலூரைத் தனி மாவட்டமாக உருவாக்கிக் கொடுத்த முதலமைச்சர். அந்த வகையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நானும் முதல்முறையாக ஜெயங்கொண்டம் பயணியர் விடுதியில் தங்கியதில் மகிழ்ந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கும் தனது மாவட்டத்தில் உள்ள சிறிய பயணியர் விடுதியில் முதலமைச்சர் தங்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.
நவம்பர் 15-ஆம் நாள் காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்கள் அந்த விடுதியில் என்னை சந்தித்தார். அவருடைய நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதே, அந்த விழாவில் திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றும்போது, அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன் அவர்களும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார். திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களும் அங்குள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து வந்திருந்தனர். அரியலூர் மாவட்டத்தில் பழைய நீதிமன்றக் கட்டடங்களே இருப்பதால், புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். விடுதியில் விரைவாகச் சந்திப்புகளை முடித்துவிட்டு, ஜெயங்கொண்டம் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது, மழைத் தூறலுக்கிடையிலும் மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.
காரில் இருந்தபடி கையசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட நான், மக்கள் மழையில் நின்று வாழ்த்துவதைப் பார்த்ததும், கீழே இறங்கி நடந்து சென்று, அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டேன். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டேன். வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், ‘ரோடு ஷோ’ என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் அவருடைய சிலையை நிறுவவேண்டும் என்று மாவட்டக் கழகங்களுக்குப் பணிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரான அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னெடுப்பில் ஜெயங்கொண்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டிருந்தது. அதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை உங்களில் ஒருவனான நான் பெற்று மகிழ்ந்தேன்.
சிவசங்கர் அவர்கள் கழகப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டு, இயக்கத்தின் கொள்கைகளையும் ஆட்சியின் சாதனைகளையும் மக்களின் மனதில் பதியச் செய்கிற வகையில் பரப்புரையைச் சிறப்பாகச் செய்பவர். அத்துடன் அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருப்பதாலோ என்னவோ, அரியலுர் - ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய – நகர - பேரூர்க் கழகச் செயலாளர்களின் பிரசாரத்திற்காகப் புதிய ஜீப் வாகனங்களை வழங்கும் நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தார். கழகத்தின் கொள்கைகளும் சாதனைகளும் மக்களிடம் பயணிக்கின்ற வகையில், அந்த வாகனத்தின் சாவிகளைக் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதனைத் தொடர்ந்து உங்களில் ஒருவனான என்னுடைய பயணம், ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் டீன் ஷூஸ் என்ற தோல் அல்லாத காலணித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவை நோக்கிச் சென்றது.
தைவான் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், தோல் அல்லாத காலணிகளைத் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். தெற்காசியாவில் தனது தொழிற்சாலையை நிறுவவேண்டும் என விரும்பியபோது, அதைத் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள ஜெயங்கொண்டத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனைச் செயல்வடிவமாக்கும் வகையில் நவம்பர் 15-ஆம் நாள் ஜெயங்கொண்டத்தில் அடிக்கல் நாட்டிடச் சென்றேன். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், “எங்கள் தொகுதிக்கு வரும் முதல் தொழிற்சாலை இதுதான்” என்று நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தார்.
தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு பெரியளவில் உயர்கல்வித் தகுதி அவசியமில்லை. பள்ளி இறுதித் தேர்வு முடித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை இந்தத் தொழிற்சாலைகள் வழங்கி வருகின்றன. பணியாளர்களில் ஏறத்தாழ 80% பேர் பெண்கள்தான். உள்ளூரிலேயே 20 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தக் கூடியதாக இருக்கிறது. பெரம்பலூரில் மற்றொரு நிறுவனத்தின் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலையை நம் திராவிட மாடல் அரசு கொண்டு வந்ததன் மூலம், அதில் பணியாற்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் பெறுகின்ற பலன்களையும், அதனால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் என்னிடம் நேரடியாகவே பகிர்ந்துகொண்டனர். அத்தகைய வாய்ப்பை அரியலூர் மாவட்ட மக்களுக்கும் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார மக்களுக்கும் உருவாக்கித் தரும் வகையில் டீன் ஷூஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது முதல், அதற்குரிய முதலீடுகளை ஈர்த்து, ஜெயங்கொண்டத்தில் அடிக்கல் நாட்டுவதற்குத் தைவான் நாட்டு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களை அழைத்து வருவது வரை அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தார் தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா அவர்கள். அடிக்கல் நாட்டியதுபோலவே உற்பத்தியையும் விரைவாகத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை என் எண்ணம் அறிந்து நிறைவேற்றுவதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.
ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். உங்களில் ஒருவனான என்னைப் பார்த்ததுமே மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து, ஆரவாரம் செய்ததுடன், “இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்”, “திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்” என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, “நிச்சயம் 200 ஜெயிப்போம்” என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர். மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.
அரியலூர் செல்லும் வழியில் வாரணவாசி என்ற ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்தேன். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்களும், துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் வரவேற்பளித்து, திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம், மகப்பேறு உதவித் திட்டங்கள் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உணவில் என்னென்ன வகையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன என்பதை ருசித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் அந்த உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். எந்தெந்த உணவில், என்னென்ன சத்துகள் நிறைந்துள்ளன, எத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எந்த விதமான உணவு வகைகள் தரப்படுகின்றன என்பதை எனக்கு விளக்கினர். அந்த உணவை சுவைத்துப் பார்த்தேன். சத்தான பொருட்களால் சுவையாகச் சமைக்கப்பட்டிருந்தது.
வாரணவாசி அங்கன்வாடியில் ஊட்டச் சத்துப் பெட்டகத்தை வழங்கி, ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பினைத் தொடங்கி வைத்ததுடன், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கான சத்துப் பெட்டகங்களையும் வழங்கினேன். முன்பு எடை குறைவாக இருந்த குழந்தைகள், இந்தத் திட்டத்தின் முதல் தொகுப்பில் பயன் பெற்று நலமுடன் இருப்பதைப் பயனாளிகளின் குடும்பத்தார் தெரிவித்தபோது, அந்தக் குழந்தைகளை நான் தூக்கிப் பார்த்தேன். குழந்தைகளின் புன்னகையில் மகிழ்ந்து முத்தமிட்டேன். அவர்களின் வளர்ச்சியைப் பெற்றோரிடம் கேட்டறிந்தேன்.
முன்பு சில இடங்களுக்கு ஆய்வுகளுக்காகச் சென்றபோது, சத்துக் குறைபாட்டால் எடை குறைவான குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் கோரிக்கை மனுக்களும் அளித்திருந்தனர். முதல் தொகுப்பினைத் தொடங்கி வைத்து, ஓராண்டு முடிந்த நிலையில், அதன் பயன்கள் குறித்து ஆய்வு செய்து, கூடுதலாக என்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, துறை சார்ந்த ஆலோசனைகளை நடத்தி, சத்துப் பெட்டகத்தை வழங்க முடிவு செய்தோம். உலக அளவில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மருத்துவர்கள் என்ன பரிந்துரை செய்வார்களோ அதற்கேற்ப பேரீச்சம்பழம், நெய், சத்துமாவு உள்ளிட்ட பலவும் அந்தப் பெட்டகத்தில் உள்ளன.
குழந்தைகளின் நலன் காக்கும் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்துவிட்டுப் புறப்படும்போது, வழியில் பலரும் தங்கள் குழந்தைகளை என்னிடம் கொடுத்துப் பெயர் வைக்கச் சொன்னார்கள். திராவிடச் செல்வன், செம்மொழி போன்ற பெயர்களைச் சூட்டினேன். வழியெங்கும் கிடைத்த வரவேற்பினால், அரியலூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சற்று தாமதமாகிவிட்டது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரையாற்றினர். ‘அரியலூர் அரிமா’ என நான் பெருமிதத்துடன் குறிப்பிட்ட, அரசியலில் என்னால் வார்ப்பிக்கப்பட்ட அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரும் ஆற்றல் மிக்க அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் இந்த விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்ததுடன், தன்னுடைய மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் அக்கறை செலுத்தி அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.
நான் உரையாற்றியபோது, பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களுக்குக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள், அதில் பயன் பெற்றவர்கள், தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், அதனால் பெறக்கூடிய பயன்கள் இவற்றை எடுத்துரைத்து, நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்டுச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வரும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டம் போன்ற எதிர்காலத்திலும் தொடரவிருக்கும் இந்தத் திட்டங்களால் வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை மனதின் அடியாழத்திலிருந்து உணர்வுப்பூர்வமாகச் சொன்னேன். அரசு விழாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உங்களில் ஒருவனான என் கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அங்குத் திரண்டிருந்த ஏறத்தாழ 20 ஆயிரம் பேருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றதை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் வாயிலாக உறுதி செய்துகொண்டு, அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு சென்று சேரவேண்டிய பொறுப்பும் நம்முடையது என்பதைத் தெரிவித்து, பெரம்பலூருக்குப் புறப்பட்டேன். நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட அனைவரும் நலமுடன் வீடு சென்று சேர்ந்தார்கள் என்ற தகவலும் எனக்கு கிடைத்தது.
பெரம்பலூர் செல்லும் வழியில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாரும் தற்போது நீலகிரி தொகுதி எம்.பி.யாக இருந்தாலும், எப்போதும் பெரம்பலூரின் மண்ணின் மைந்தர் என்ற பெருமைக்குரிய ஆ.இராசா அவர்களும், பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஜெகதீசன் அவர்களும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களின் இல்லத்தில் தங்கி, மதிய உணவை முடித்துவிட்டு, அரசுத் திட்டங்கள் குறித்த ஆய்வுப் பணிகளுக்கான நிகழ்ச்சிக்குச் சென்றேன். பெரம்பலூர் -அரியலூர் இரு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அரசுத் திட்டங்களின் நிலை குறித்தும், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். காலை உணவுத் திட்டம் போன்ற மக்களின் பெரும் வரவேற்புத் திட்டங்களின் செயல்பாடுகளை அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும் என்பதையும், சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கும் நேரம், குழந்தைகள் சாப்பிடும் நேரம் போன்ற சமயங்களில் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.
அரசு சார்ந்த திட்டங்கள், அரசு சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுகளை நிறைவு செய்தபிறகு, இந்த அரசு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைவதற்குக் காரணமான கண்மணிகளாம் உடன்பிறப்புகளுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் கழகத்தைக் கட்டிக் காத்து வளர்த்த மூத்த முன்னோடிகளான க.சொ.கணேசன், ஆண்டிமடம் எஸ்.சிவசுப்பிரமணியம், அரியலூர் ஆறுமுகம், பெரம்பலூர் ஜே.எஸ்.ராஜூ, வேப்பந்தட்டை செல்லக்கருப்பண்ணன், ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ஆதிமூலம், இரத்தினசாமி, அரியலூர் நாராயணன் உள்ளிட்ட பலரையும் நினைவுகூர்ந்தே, கழக நிர்வாகிகளிடம் என் உரையைத் தொடங்கினேன்.
தீரர் கோட்டமான திருச்சி நம் கழகத்தின் கோட்டை என்றால் அதன் தலைவாசல்களாக அரியலூரும் பெரம்பலூரும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, கழகப்பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும் என வலியுறுத்தினேன். மினிட்ஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்து, இரு மாவட்டங்களின் ஒன்றிய – நகர - பேரூர்க் கழகங்களின் செயல்பாடுகளை அறிந்துகொண்டேன்.
எப்போதும் என்னை அன்புடன் வரவேற்று மகிழ்பவரும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் மாமாவுமான மூத்த ஒன்றியச் செயலாளர் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒன்றியத்தில் அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதைக் கழகத்தினரிடம் எடுத்துக்கூறினேன். அரியலூர் மாவட்டத்தில், ஆண்டிமடம் வடக்கு ஒன்றியம் அதிகமாக 24 நிகழ்ச்சிகளையும், அரியலூர் நகரக் கழகம் 21 நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் அதிகமாக 16 நிகழ்ச்சிகளும், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் 11 நிகழ்ச்சிகளும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் 9 நிகழ்ச்சிகளும் நடத்தி மக்களிடம் கழகத்தை வலிமையாக வைத்திருப்பதை அறிந்து பாராட்டினேன். கழகத்தில் உள்ள அனைவரும் சுணக்கமின்றிச் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். படம் எடுக்கும்போது கழக நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.