கர்நாடக மாநில சட்டப்பேரவை கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது .
பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? அவர்கள் தனியாக பணத்தை அச்சடிக்கிறார்களா ?
அந்த பணம் எல்லாம் அவர்கள் ஆட்சியில் குவித்த லஞ்ச பணம்தான். கடந்த முறை, அந்த பணத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கினர். ஆனால் இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.