நெல்லை மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை திறந்து வைத்து நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய கட்டடங்கள் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்த பின்னர் மருத்துவமனைகளில் கட்டண படுக்கை வசதி அமைக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த திட்டம் படிப்படியாக மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பத்தாவது இடமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 அறைகள் கொண்ட கட்டண படுக்கை வசதி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு நபர் தங்கி சிகிச்சை பெறும் வசதி கொண்ட அறைக்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் ஆகவும், இரண்டு பேர் தங்கி சிகிச்சை பெறும் அறைக்கு ரூபாய் 1500 கட்டணமாகவும், நான்கு பேர் தங்கும் அறைக்கு ரூபாய் 2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைக்காட்சி, சுடுதண்ணீர், தனி கழிவறை , சோபா வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், கோவில்பட்டி, கன்னியாகுமரி உள்ளிட்ட பத்து மருத்துவமனைகளில் கட்டண வசதி அறைகள் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பெண் மருத்துவர்கள், பெண் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் பணியில் இருக்கும் போது ஓய்வெடுக்கவும் உடை மாற்றுவதற்கும் தேவையான பின் சோன் ( PINK ZONE ) மையம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது .15 லட்சம் மதிப்பில் 5 பிங்க் சோன் அறைகள் முதல் கட்டமாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே 72 கோடியே 10 லட்சம் செலவில் மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடத்தில் புதிதாக 400 படுக்கைகள் 10 அறுவை சிகிச்சை அரங்கம் போன்றவை அமையப் பெற உள்ளது.மொத்தமாக 104 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிட பணிகள் நடந்து வருகிறது.1353 மருத்துவ பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக உள்ளது.2026 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேலும் 1200 மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும். மொத்தமாக 2553 மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 27 ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு 100% மருத்துவர்கள் நியமனம் செய்து முடிக்கப்படும்.
மருத்துவர்கள் தேர்வுக்காக 24000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.அதிகப்படியான விண்ணப்பம் வந்துள்ளதால் இரண்டு கட்டமாக தேர்வு நடத்தலாமா என ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியில் இந்த தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கிராம செவிழியார்கள் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாணை வழங்கும் நிலையில் உள்ளது. ஆனால் சிலர் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் அவைநிலுவையில் உள்ளது.வழக்கு தொடர்ந்தவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் அவர்களிடம் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்தி பணி இடங்களை நிரப்ப தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.