உயிரிழந்த தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியமானது வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு வழங்குப்படும் நிதியுதவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசால் 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு வழங்கப்படும் அரசின் ஆண்டு மானியமும் 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2024) தலைமைச் செயலகத்தில், அவ்வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.