வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகனமழை பெய்தது.
எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவிவுறுத்தல் படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெள்ளப்பாதிப்பில் இருந்து சென்னையை மீட்டு வருகின்றனர்.
இதனிடையே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் 600 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி மண்டலம் 9 க்குட்பட்ட 116 வது வார்டு வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் இரண்டு நாட்கள் மழை பெய்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு, பகல் பார்க்காமல் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பணிகளை கவனித்து, பொதுமக்களின் குறைகளை சரிசெய்வது பாராட்டை பெற்று வருகிறது.