மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.
தற்போது மீண்டும் இம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வன்முறையை மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விமர்சித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளது. இம்மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி வன்முறை சம்பவங்கள் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடத்தப்பட்ட பெண்கள், சிறுவர்களின் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தீவிரமடைந்ததற்கு அம்மாநில பா.ஜ.க முதல்வர் பிரேன் சிங்கே காரணம். ஆனால் முதல்வர் பதவியில் இருந்து அவரை நீக்க ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது.
அவரை முதல்வராக தொடர அனுமதித்தன் காரணமாக மாநில அரசு இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு கடுமையான தலையிட வேண்டிய நேரம் இது.” என தெரிவித்துள்ளது.