சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவு முதலே, அதிகனமழை பெய்து வரும் நிலையில், இரவு முதல் களத்தில் நின்று ஆய்வு செய்து வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பருவக்கால மழையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்திருந்தாலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.
மேலும் பல இடங்களில் நீர் வற்றிவிட்டது. இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழை நீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். அந்தப் பகுதியில் வசியக்கூடிய மக்களிடமும் அவர்களது பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்துள்ளேன்.
இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.