தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாகவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவே பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய்பாலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சாலையில் மழைநீர் தேங்காத வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் வாகனப்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது.
மேலும், சாலையில் விழுந்த மரங்கள் உடனே அகற்றப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை பெருநகர காவல் துறை வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும், 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் தாழ்வான மற்றும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள 35 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் சென்னை மாநகராட்சி, மக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.