பருவமழை எதிரொலியாக தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மழைக்கால அவசரப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று முதல் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படக்கூடிய பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் மழைக்கால அவசரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகள் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் பணிகள் நடைபெறக்கூடிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய்பாலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பெருமழையிலும், மழை வெள்ளநீர் செல்லக்கூடிய வழித்தடங்கள் தடைபெறாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
இதனை அடுத்து சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மிர்சாப்பேட்டை மார்கெட் பகுதியில் மழையின் காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு மேலும் கன மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்காமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா சாலை பகுதியில் நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதலாக ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாயினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னையில் அதிக கன மழை பொழியும் நேரங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.