இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையின தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டார்.அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல்போகும் என்ற காரணத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இலங்கையின் புதிய அதிபர் அறிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் நிலையில், அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் அநுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி 159 தொகுதிகளை கைப்பற்றி நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்த நிலையில், இன்று அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெயர் ஹரிணி அமரசூரியாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் அவரோடு 21 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹரிணி அமரசூரியா 6.55 லட்சம் வாக்குகள் பெற்று இலங்கை வரலாற்றிலேயே அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெயரை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.