சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக உரையாற்றினார். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை அரசுப்பள்ளியிலும் மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் மறுபிறவி குறித்தும், பாவம் - புண்ணியம் குறித்தும் பேசினார்.
மேலும் போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் மாற்றுத்திறனாளியாக பிறப்பதற்கு காரணம் என்றும் பேசினார். மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை குறித்த பேச்சை இடைமறித்து தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவரையும் தரக்குறைவாக அவமதிக்கும் வகையில் பேசினார். இந்த விவகாரம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிய நிலையில், மகாவிஷ்ணுவின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அடுத்த நாளே, சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்துரை கூட்டம் நடைபெற்றது. அப்போது மூடநம்பிக்கை குறித்த பேச்சை துணிச்சலாக தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கு மேடையில் வைத்து பாராட்டை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மூடநம்பிக்கை குறித்த பேச்சுக்கு அனுமதி அளித்த அரசுப்பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணுவை கைது செய்ய கோரிக்கை வலுத்த நிலையில், வெளிநாடு சென்று இன்று சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தற்போது மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் BNS இல் 4 பிரிவுகளில் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு மீது,
192 - கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,
196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது.
352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது.
353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை
- உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.