தமிழ்நாடு

குவைத் தீ விபத்து : தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குவைத் தீ விபத்து : தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இங்கு இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் (அங்குள்ள நேரப்படி) கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். எனினும் அங்கிருந்த புகைமூட்டத்தில் ஒரு சிலர் மூச்சுத்திணறி உடல்கருகி பலியாகியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 11 பேர் உள்பட 40 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories