உலகம்

குவைத் தீ விபத்து - சிக்கிய தமிழர்கள்... களத்தில் இறங்கிய அயலகத் தமிழர் நலத்துறை - முழு விவரம் !

குவைத் தீ விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அவசர உதவி எண் அறிவித்துள்ளது.

குவைத் தீ விபத்து - சிக்கிய தமிழர்கள்... களத்தில் இறங்கிய அயலகத் தமிழர் நலத்துறை - முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இங்கு இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் (அங்குள்ள நேரப்படி) கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். எனினும் அங்கிருந்த புகைமூட்டத்தில் ஒரு சிலர் மூச்சுத்திணறி உடல்கருகி பலியாகியுள்ளனர்.

குவைத் தீ விபத்து - சிக்கிய தமிழர்கள்... களத்தில் இறங்கிய அயலகத் தமிழர் நலத்துறை - முழு விவரம் !

இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 11 பேர் உள்பட 40 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அயலகத் தமிழர் நலத்துறையும் களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி அயலகத் தமிழர் நலத்துறை அவசர உதவி எண்ணும் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவைத் தீ விபத்து - சிக்கிய தமிழர்கள்... களத்தில் இறங்கிய அயலகத் தமிழர் நலத்துறை - முழு விவரம் !

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உதவி எண் :

+91 1800 309 3793,

+91 80 6900 9900,

+91 80 6900 9901.

banner

Related Stories

Related Stories