தர்மபுரி மாவட்டம், ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம். இந்த கிராமத்தில், 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டும், கிராம மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது, 18 மலை வாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது, அதில் வனத்துறையை சேர்ந்த 155 பேர், காவல்துறையை சேர்ந்த 108பேர், வருவாய்த்துறையினர் 6 பேர் என 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இந்த வழக்கு கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு 2008ல் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில்,தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சம்பவத்தில் தொடர்புடைய பகுதியாக கருதப்படும் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரிடையாக சென்று மக்களை சந்தித்து வழக்கு தொடர்பாக கேட்டறிந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
5 லட்ச ரூபாயை குற்றம் புரிந்தவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர், அப்போதைய எஸ்.பி., மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.