மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Maxivision Super Speciality Eye Hospitals Private Limited), 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தனது முதல் கண்சிகிச்சை மையத்தை தஞ்சாவூரில் மேக்சிவிஷன் தொடங்கியுள்ளது. இதை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "இந்தியாவின் முன்னணி கண் மருத்துவமனையான மேக்சிவிஷன் மருத்துவமனையுடன் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பும், அதில் 70% பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தஞ்சையில் IT பார்க் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. IT பார்க்க செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேளாண் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்னணி நிறுவனங்கள் முன்வருகின்றன. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர் மாநாடு இருக்கும்." என தெரிவித்துள்ளார்.