முரசொலி தலையங்கம்

பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !

பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (05-11-2024)

இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருப்பது துயரமானது. கடந்த ஓராண்டாக போர் விடாமல் தொடர்ந்து வருகிறது. அந்தப் போரைத் தடுக்கும் செயலை உலகநாடுகள் அக்கறையுடன் செய்வதாகத் தெரியவில்லை. 'அவுங்களைத் திருத்த முடியாது' என்று அனைத்து நாடுகளும் கருதுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் தாக்குதலில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் 17 ஆயிரம் பேர் குழந்தைகள். 11 ஆயிரம் பேர் பெண்கள். 26 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். 175 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அனைத்து பல்கலைக் கழகங்களும் சிதைந்துள்ளன. மசூதிகளும் தேவாலயங்களும் சிதைந்துள்ளன. வாழும் இடங்களில் வாழ முடியாமல் இடம்பெயர்ந்துள்ளார்கள் மக்கள்.காசாவில் இடிந்துபோன வீடுகளைக் கட்டுவதற்கே 40 ஆண்டுகள் ஆகலாம் என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் எழுதுகின்றன. காசாவின் அனைத்துக் கட்டமைப்புகளின் கால் பங்கு அழிக்கப்பட்டதாக ஐ.நா. அறிக்கை சொல்கிறது. 66 விழுக்காடு வீடுகள் இடிந்து போய்விட்டன. அங்கிருக்கும் அனைத்து மக்களும் வறுமையில் இருக்கிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா. அறிக்கை. கடந்த 15 ஆண்டுகளாக மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வந்த காசாவின் பெரும்பகுதி ஓராண்டு காலத்துக்குள் அழிக்கப்பட்டு விட்டது. இந்த சோகங்கள் அனைத்தும் உலகநாடுகளால் உணரப்பட்டதாகத் தெரியவில்லை.

பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புவாதத்துக்கு எதிராக பாலஸ்தீனம் போராடி வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கையானது, இரு நாட்டுப் போர் என்பதைத் தாண்டி குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் யுத்தமாக மாறி வருகிறது. காசா, லெபனான் ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து வருகிறது இஸ்ரேல். எனவே அதனை இரு நாட்டுச் சண்டையாகக் கருதி ஒதுக்கவோ, கண்டும் காணாமல் இருக்கவோ முடியாது. ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன. ஈரான் வந்திருந்த ஹிஸ்புல்லா தலைவர் இஸ்மாயில் ஹனீயேவை, இஸ்ரேல் உளவுப்பிரிவு கடந்த ஜூலை 31 ஆம் தேதி கொலை செய்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல் லெபனானில் வைத்து கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதற்கும் இஸ்ரேல் பின்னணி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஈரான் வீரர்கள் நால்வரைக் கொலை செய்துள்ளது இஸ்ரேல். இதனால் கோபம் கொண்ட ஈரான், கடந்த 1 ஆம் தேதியன்று இஸ்ரேல் ராணுவ நிலைகளைக் குறி வைத்து தாக்குதலைத் தொடங்கியது.

பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !

அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகிறது ஈரான். “எங்களின் ராணுவ நிலைகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும்” என்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி சொல்லி இருக்கிறார். அந்த நாட்டின் அதிக ஆட்சியதிகாரம் படைத்தவர் அவர்தான்.“ஈரான் தேசத்தின் மீதும், ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு கடுமையான பதிலடி தரப்படும். இது யூத ஆக்கிரமிப்புவாத அரசுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் பொருந்தும்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். இது எங்கு போய் முடியுமோ எனத் தெரியவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சில நாட்களுக்கு முன்னதாக அரபு நாடுகளுக்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும், அரபு நாடுகளுடன் இணைந்து சமாதானமாகப் போக விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்.“இங்குள்ள அரபு நாடுகளுடன் சமாதானம் அடைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருந்தேன். அந்த செயல்முறையை மீண்டும் தொடர விரும்புகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இது உண்மையாகச் சொன்னதாக இருந்தால் செயலில் காட்ட வேண்டியது அவர்தானே தவிர வேறு யாருமல்ல. காசாவிலும் லெபனானிலும் பதற்றம் குறைக்கப்பட வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலுக்குச் செய்யும் உதவிகளை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும். இதனை ராஜதந்திரமாக அல்ல, அசிங்கமாகப் பார்க்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டு அதிபர்களின் ஈகோவை விட மக்களின் உயிரே முக்கியம். 'எந்த இன மக்கள்' என்பதில் வேறுபாடு இல்லை. எல்லா உயிரும் ஒன்று என்று எண்ணிச் செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories