மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது.
நவ.7 ஆம் தேதி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில், டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுத்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுபோல் தற்போது டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைத்து மீண்டும் சுற்றுச்சூலை வேதாந்தா குழும் அழிக்கப்பார்கிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஒன்றிய அரசு கொடுத்து இந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி மற்றும் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள விளக்கத்தில்,” ஒன்றிய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு எந்தவிண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.