சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாகப் பொருள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த பேச்சு மக்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி சென்று இப்படி பேச முடியுமா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்.
நான் ஆளுநருக்குச் சவால் விடுகிறேன். தூத்துக்குடியில் சென்று இந்த கருத்தைப் பேச முடியுமா? அல்லது மாணவர் மத்தியில் பொது மேடையில் பேச முடியுமா?. 100 நாட்கள் நடந்த போராட்டம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது ஸ்டெர்லைட் சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று கூறினார். அ.தி.மு.கவினர் பேசியதிற்கும் ஆளுநர் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தூத்துக்குடியில் சென்று இதை பேச சொல்லுங்கள் அப்போது தெரியும் மக்கள் என்ன நிலைபாட்டில் இருக்கிறார்கள் என்று" என தெரிவித்துள்ளார்.