288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்திற்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 20 லட்சத்து 93 ஆயிரம் இளம் வாக்காளர்கள் உட்பட 9 கோடியே 63 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதனையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் விரார் எனும் கடற்கரை நகரில் உள்ள விடுதியில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்துடன் தங்கி தங்கியுள்ளதாக பகுஜன் விகாஸ் அகாடி வேட்பாளர் க்ஷிஜித் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற க்ஷிஜித் தாக்கூர், பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேவின் அறைக்குள் நுழைந்து சோதனை செய்துள்ளார். அப்போது, கட்டுகட்டாக 5 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
யார் யாருக்கு பணத்தை விநியோகம் செய்ய வேண்டும் என விவரங்களுடன் இருந்த டைரியையும் கைப்பற்றியதாக ஹிதேந்திரா தாக்கூர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இருதரப்பு ஆதாரவாளர்களுக்கும் இடையே, விடுதியில் மோதல் ஏற்பட்டது. பணப்பட்டுவாடா செய்ய வந்த பாஜக நிர்வாகியை முற்றுகையிட்டு, எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ”ரூ.5 கோடி பணம் எங்கிருந்து வந்தது?. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து உங்களுக்கு டெம்போவில் அனுப்பியது யார்?” என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.