இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதியரசர்கள் பங்கேற்று சமூக நீதி குறித்தும் அதற்கான தி.மு.க. அரசின் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
சமூகநீதி நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அதிகப்படியான அளவில் எனக்கு பாராட்டுத் தெரிவித்தீர்கள். இந்தப் பாராட்டுகள், புகழுரைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
தொண்டர்களின் பலத்தால், அவர்கள் நித்தமும் அளித்துவரும் ஊக்கத்தால்தான், எளியேனால் இத்தகைய சாதனைகளுக்கு முடிந்தளவு பங்களிப்பைச் செலுத்த முடிந்தது. தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம்.
27 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுகளை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கி இருப்பதன் மூலமாக சமூகநீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த சாதனை என்பது சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் மூலமாக இந்த சாதனையைப் பெற்றுள்ளோம். இந்தப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை தலைநிமிர்ந்து சொல்வதை பெருமையாக நினைக்கிறேன்.
சமூகநீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டுக்கு கொடுத்த மிக முக்கியமான கொடையாகும். சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும்.
* அனைத்து சமூகத்தவருக்குமான இடஒதுக்கீட்டை 1921 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி!
* இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாகப் போராடி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும் அண்ணாவும் காமராசரும்.
* பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கியது திமுக.
* பட்டியல் இனத்தவர் இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கியது திமுக.
* இந்த 18 சதவிகிதத்தில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 சதவிகிதம் வழங்கி, முழுமையாக 18ம் பட்டியலினத்தவருக்கு கிடைக்க வழி செய்தது திமுக.
* பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியது திமுக.
* மதம் மாறிய ஆதிராவிட கிறிஸ்தவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் சேர்த்தது திமுக.
* மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 சதவிகிதமாக பிரித்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக.
* அருந்ததியர்க்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக.
* இசுலாமியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக.
* மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு பிரதமர் வி.பி.சிங் மூலமாக வலியுறுத்தியது.
* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக.
- இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் சமூகநீதித் தத்துவத்துக்குச் செய்த மாபெரும் பங்களிப்பு ஆகும்.
இதன் தொடர்ச்சியாக 27 சதவிகித இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்புகளில் வழங்க வலியுறுத்தி போராடினோம். பெற்றுத் தந்துள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.