மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று மொழிப்போர் தியாகிகள் குறித்து தமிழ் மொழிக்காகவும் தமிழ்நாட்டுக்காவும் தி.மு.க. ஆற்றிய பணிகள் குறித்து பட்டியலிட்டு உரையாற்றினார்.
அப்போது கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ், தமிழினத்தின் மேன்மைக்காக எத்தனை திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
* அரசு பள்ளிகளில் படித்தவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
* வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை.
* தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்க்கு தகைசால் தமிழர் விருது.
* மதுரையில் 114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்.
* உயரிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்.
* மதுரை இளங்குமரனார், கி.ராஜநாராயணன் ஆகியோர் மறைவுக்கு அரசு மரியாதை.
* பேராசிரியர், நாவலர் ஆகியோர் நூல்கள் நாட்டுடமை.
* சிலம்பொலி செல்லப்பனார், மதுரை இளங்குமரனார், முருகேச பாகவதர், தொ.பரமசிவம், புலவர் செ.ராசு, கோவில்பட்டி பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் ஆகியோர் நூல்கள் நாட்டுடமை.
* திருக்கோவில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு.
* ஜெர்மன் நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையானது தொய்வின்றி இயங்க 1.25 கோடி நிதி.
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
* மாமன்னன் ராசராசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
* தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க 5 லட்சம் மதிப்பிலான இலக்கிய மாமணி விருது.
* தமிழ் - திராவிட சிந்தனையின் பிதாமகர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.
* தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாள்.
* முகாம் வாழ் இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்கு 300 கோடி ஒதுக்கீடு.
* கல்லூரி பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்ப்பு.
* பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் அறிமுகம் செய்தல்.
* வ.உ.சிதம்பரனாருக்கு 150 ஆவது பிறந்த நாள் விழாக்கள்.
* மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் விழாக்கள்.
*அறிஞர் மு.வரதராசனாருக்கு இராணிபேட்டையில் சிலை.
* குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது.
* சிறந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்.
* இளந்தளிர் இலக்கியத் திட்டம் தொடக்கம்.
* செந்தாப்புலவர் கார்மேகனார் பெயரால் புதிய நூலகக் கட்டடம்.
* சிறந்த இதழியளார்களுக்கு கலைஞர் செங்கோல் விருது.
- இவை அனைத்துக்கும் மேலாக உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடியின் வரலாற்றை உலகம் பறைசாற்றும் ஆதாரங்களைத் திரட்ட தமிழகத்தின் பழம்பெரும் இடங்களில் அகழாய்வு பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி' நாம் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் உலகம் ஒப்புக்கொள்ளும் தன்மையுடன் செயல்படுத்திக் காட்ட திட்டமிட்டுள்ளோம்.
இதுதான் தமிழின் ஆட்சி என்பது. இதுதான் தமிழினத்தின் ஆட்சி என்பது. இதுதான் தந்தை பெரியாரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், விரும்பிய ஆட்சி ஆகும்.
நமக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனைச் செய்தாலும் - ஒன்றிய அரசிடமும் தமிழுக்காக போராடியும் வாதாடியும் கோரிக்கை வைத்தும் வருகிறோம்.
* மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஆக்கத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்ததைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றும் போராடி வருகிறோம்.
* இந்திய அரசு அலுவலகங்களில் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என்று வாதாடி வருகிறோம்.
* உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வலம் வரவேண்டும் என்று முழங்கி வருகிறோம்.
இவை அனைத்தும்தான் நாம் யார் என்பதற்கான அடையாளங்கள் ஆகும் என முதலமைச்சர் உரையாற்றியுள்ளார்.