சென்னை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் கற்பகம், இவரின் தங்கை அனிதா ஆகியோரும் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதனை அறிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா, இவரது தம்பி அபு ஹசன், தங்கை ரஹமது பீவி நிஷா மற்றும் ராஜேந்தின் ஆகியோர் மூன்று பேரையும் சந்தித்து உங்களுக்குப் பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கூறி அவர்களை நம்பவைத்துள்ளனர்.
மேலும் பில்லி சூனியம் எடுத்துவிட்டால், நீங்கள் கணவருடன் ஒன்றாகச் சேர்ந்து விடுவீர்கள் என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். இதையடுத்து பில்லி சூனியம் எடுப்பதற்காகப் பூஜை செய்வதாகக் கூறி ஒரு வருடமாக அந்தோனி அம்மாளிடம் ரூ.30 லட்சமும், கற்பகத்திடம் ரூ.30 லட்சமும், அனிதாவிடம் ரூ.20 லட்சமும் வாங்கியுள்ளனர்.
ஒரு வருடமாகப் பூஜை நடைபெற்றும் இவர்கள் கூறியதை போல் கணவர்கள் மீண்டும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மூன்று பேரும் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
மேலும் இவர்களிடம் வாங்கிய பணத்தில் பாத்திமாவின் குடும்பத்தினர் சொகுசு பங்களா கட்டி அதில் வசித்து வந்ததும் இவர்களுக்குத் தெரிந்து மூன்று பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து மூன்று பேரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் பாத்திமா, அபு ஹசன், ரஹமது பீவி நிஷா, ராஜேந்திரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பண மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.