செல்போன் டவர் அமைத்து மாதந்தோறும் வருவாய் பெற்று தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பல லட்ச ரூபாய் மோசடி செய்த 13 நபர்களை மாநகர காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள் 45 சிம்கார்டுகள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்த சகாய மேரியின் தொலைபேசி எண்ணுக்கு கடந்த மாதம் குறுஞ்செய்தி வந்தது. அதில் தங்களின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து தருவதாகவும் இதற்கு முன்பணமாக மூன்று லட்ச ரூபாயும் மாதந்தோறும் முப்பத்தி ஐந்து ரூபாய் வாடகை ஆகவும் பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குறுஞ்செய்தியை நம்பி சகாய மேரி சம்பந்தப்பட்ட தொலைபேசியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது செல்போன் டவர் அமைத்து முன்பணம் மற்றும் மாதம் தோறும் வாடகை பணம் கிடைத்திட முதற்கட்டமாக ஏழு லட்ச ரூபாய் செலுத்திட வேண்டுமென்று கூறியுள்ளனர். இதனையடுத்து சகாய மேரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் ஏழு லட்ச ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகாய மேரி, சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்ததை அடுத்து இந்த வழக்கு சைபர் கிரைம் இது மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் சகாய மேரியிடம் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அந்த எண்ணுக்கு தொடர்ந்து வரும் அழைப்புகளையும் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடி கும்பல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இருப்பதாக வந்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த மல்லையா, திண்டுக்கல்லைச் சேர்ந்த தனசேகரன், டெல்லியை சேர்ந்த சிவா உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப் 34 செல்போன் 45 சிம்கார்டுகள் மற்றும் 20 வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையிடம் பிடிபட்ட இந்த மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் இதுபோன்று செல்போன் டவர் அமைத்து தருவதாகவும் அதற்கு முன் பணமாக பல லட்ச ரூபாய் தருவதாகவும் கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.