திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து, "குப்பை கொட்டக் கட்டணம்" என்ற அறிவிப்பை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், சென்னை மாநகராட்சி எப்படி தான்தோன்றித் தனமாக மக்களின் உரிமையைப் பறிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, “மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி!
'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? ‘எண்ணித்துணிக கருமம்’ என அ.தி.மு.க. அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.