“தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்தால், எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை அ.தி.மு.கவுக்குத் தங்கள் தீர்ப்பின் மூலமாகக் காட்டத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என சிவகங்கை தமிழகம் மீட்போம் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (23-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“இந்தியாவின் விடுதலைக்காகப் போராடுவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை நிரூபித்த மண் தான் இந்த சிவகங்கை சீமை. கண்கள் சிவக்க, ரத்தம் கொதிக்க, கையில் உள்ள வாளே சூடாகிக் கனல் தெறிக்கும் வகையில் வீரப் புதல்வர்கள் வாழ்ந்த மண் இந்த சிவகங்கை மண். அடுத்த நிமிடத்தில் மரணம் என்பதைத் தெரிந்தே, உடலில் நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்த குயிலி வாழ்ந்த மண் இந்த மண்!
ஒருவரை வீழ்த்தினால் விடுதலைப் போராட்டத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருந்த பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக வாழையடி வாழையாக ஒரு குடும்பமே சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் அதுவும் இந்த சிவகங்கை மண்ணில் தான்.
முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவரைக் கைது செய்தார்கள். உடையாத் தேவரின் நினைவிடத்தில் தனது தாலியைக் காணிக்கையாக்கி களத்தில் குதித்தார் அவரது மனைவி வீரமங்கை வேலுநாச்சியார். தனது கணவரைக் கொலை செய்தவர்களைத் தோற்கடித்தார். வேலுநாச்சியாருக்குப் பின் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் ஆட்சி செலுத்தி மக்களைக் காத்தார். இப்படிக் குடும்பம் குடும்பமாக மண்ணைக் காத்த மண் தான் இந்த சிவகங்கை மண்!
வீரத்துக்கு மருது சகோதரர்கள்! கவிதைக்குக் கண்ணதாசன்! இறையியலுக்குக் குன்றக்குடி அடிகளார்! - எனத் தமிழினத்துக்கு பெருமதிப்புக்குரியவர்களை வாரி வழங்கிய மண்!
ஒரு பக்கம் சிவகங்கை வீரம்! இன்னொரு பக்கம் செட்டிநாட்டு விருந்தோம்பலும் சமையலும்! மற்றொரு பக்கம் காளையார் கோவிலும் குன்றக்குடியும் என அருள் நெறிகள்! காரைக்குடியில் வள்ளல் அழகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கல்விச் சாலைகள்!
தமிழ்நாட்டில் இன்று பல கோடிப் புத்தகங்கள் வெளியானது என்றால், அதில் பாதிப்பங்கு புத்தகங்கள் உருவாகக் காரணமான தமிழ்ப்பதிப்பாளர்கள் உருவான தமிழ்ச் சீமை இந்தச் சிவகங்கைச் சீமைதான்!
இவை அனைத்துக்கும் மேலாக, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று தலைநிமிர்ந்து நம்மைச் சொல்ல வைத்துள்ள கீழடித் தடயங்கள் கொண்ட மண் இந்த சிவகங்கை சீமை மண்! அங்கே தமிழகம் மீட்போம் என்ற ஒற்றை முழக்கத்தோடு நாம் கூடியிருக்கிறோம்!
பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழினம் இன்று உரிமை இழந்து கிடப்பதா? மானம் காத்த மருது பாண்டியர் மண்ணில் கொத்தடிமைகள் ஆட்சி நடப்பதா? தமிழுக்கும் சோதனை; தமிழனுக்கும் வேதனை என்று இன்னும் எத்தனை நாட்கள் காத்திருப்பது? போர் தொடுப்போம்! பகை முடிப்போம்! என்பதைத் தேர்தல் முழக்கமாக மட்டுமல்ல, நம்முடைய வெற்றி முழக்கமாகக் கொண்டு தமிழகம் மீட்க நாம் புறப்பட்டுள்ளோம்!
ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட காலத்தில் இருந்து, தனியாகப் புதிய மாவட்டமாக உருவானது முதல் கழகக் கோட்டையைக் காக்கும் காவலர்கள் இந்தச் சிவகங்கைச் சீமையில் கணக்கில்லாதவர்கள் உண்டு.
சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர் செ.மாதவன், பசும்பொன் தா.கிருட்டிணன், சிங்கம்புணரி பெரி.அழகு, வண்டல் மலைக்கண்ணன், காரைக்குடி சித.சிதம்பரம், திருப்புவனம் சோனைய்யா, இராம.வெள்ளையன், பெரி.சண்முகம், இராம.சிவராமன், தேவகோட்டை ரூசோ, வி.கே.என். கண்ணப்பன், காரைக்குடி இராம.நாராயணன், கல்லக்குடி போராட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களுடன் கலந்துகொண்டவரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் சுப.வீ அவர்களின் தந்தையுமான சமதர்மம் இராம.சுப்பையா, சிவகங்கை பா.மனோகரன், தலைவர் கலைஞர் அவர்களின் தனி உதவியாளராகப் பணியாற்றிய சிங்கம்புணரி கரு.செயல்மணி, சூரக்குடி தையல்நாயகி முத்துச்சாமி, தேவகோட்டை மிசா முகமது காசிம் எனப் பலரும் இந்த மாவட்டத்தில் கழகம் வளர்த்திருக்கிறார்கள்.
அதனால்தான், சமீபத்தில் இந்த சிவகங்கை மாவட்டத்தில் தோல்வி பயத்தால் 4 முறை ஒத்திவைக்கப்பட்டு 5-ஆவது முறையாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் முதலமைச்சர் தொடங்கி ஒட்டுமொத்த அமைச்சரவையும் களத்தில் இறங்கியும் நம்முடைய 8 உறுப்பினர்களின் உறுதியைச் சிதைக்க முடியவில்லை. மன உறுதிமிக்க அந்த 8 உறுப்பினர்களின் கொள்கைப் பிடிப்பை மனதார பாராட்டுகிறேன்.
அந்த வரிசையில் இன்று பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டத்தை சீரிய முறையில் நடத்தி வருகிறார். அவரையும் அவருக்குத் தோள் கொடுத்து பணியாற்றி வரும் தோழர்களையும் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! உங்கள் மண்ணுக்கே உரிய மகத்துவத்துடன் கழகத்தை வளர்த்து வருகிறீர்கள்.
இந்தத் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதை நான் உங்களுக்கு உணர்த்தத் தேவையில்லை. ஒரே இலக்குத் தான்: கழகத்தின் வெற்றி! உதயசூரியன் வெற்றி! அந்த ஒற்றை இலக்கைக் கொண்டு நாம் களம் காண வேண்டும்!
சிவகங்கை மாவட்டத்தில் கழக ஆட்சியின் போது ஏராளமான நலத் திட்ட உதவிகள் செய்யப்பட்டன. அவற்றைச் சுருக்கமாக உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்!
* 616 ரூபாய் கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் சிவகங்கை, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
* சிவகங்கை மருத்துவக் கல்லூரி!
* 55 திருக்கோவில்கள் 14 கோடி செலவில் திருப்பணி செய்யப்பட்டது!
* இளையான்குடியில் அரசு மருத்துவமனை விரிவாக்கம், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றக கட்டடம் கருவூலம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஆகியவை அமைக்கப்பட்டது.
* இளையான்குடியில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.
* சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாணவ மாணவியர் விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* மதுரை - தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது.
* சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்பட்டது.
* சிவகங்கையில் மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது.
* சிவகங்கையில் கூட்டுறவு தொழிற்பயிற்சி கல்லூரி துவங்கப்பட்டது. இப்படி என்னால் பெரிய பட்டியல் போட முடியும்.
இப்படி இந்தச் சிவகங்கை மாவட்டத்தில் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது?
* தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டத்தை ஏதாவது விரிவுபடுத்தினார்களா? இல்லை!
* தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நவீன வசதியுடன் விரிவு செய்தார்களா? இல்லை! இன்னமும் மருத்துவர்கள் பற்றாக்குறையும், வசதிக் குறைவும் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள்.
* முல்லைப் பெரியாறு அணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 142 அடி நீர் தேக்கப்பட்டும் சிவகங்கை பகுதி கண்மாய்களுக்குப் பெரியாறு பாசன பங்கு நீர் கிடைக்கவில்லை.
* வைகை பாசனத்திலும் இதே நிலை தான் தொடர்கிறது!
* மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை.
- சிவகங்கைத் தொகுதியில் மட்டும்தான் இத்தகைய அவலம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளும் இப்படித்தான் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னால் எடப்பாடித் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி தொகுதியையே தமிழ்நாட்டின் முன் மாதிரித் தொகுதியாக மாற்றிவிட்டதைப் போல பழனிசாமி பேசி இருக்கிறார். சேலம் அவரது சொந்த மாவட்டம். அதையே ஏதோ சிங்கப்பூராக மாற்றியதைப் போல பேசி இருக்கிறார்.
சேலம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பழனிசாமிக்கு நான் சில கேள்விகளை எழுப்பினேன்.
* சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் பஸ் போர்ட் எங்கே?
* சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு எங்கே?
* விரிவுபடுத்தப்பட்ட தலைவாசல் சந்தை எங்கே?
* ஓமலூரில் வாசனைத் திரவிய தொழிற்சாலை எங்கே?
* கொங்கணபுரம் ஒன்றியத்தில் தொழில் பேட்டை எங்கே?
* ஓமலூரில் குளிர்பதனக் கிடங்கு எங்கே?
* எடப்பாடியில் கைத்தறி ஜவுளி பூங்கா எங்கே?
* வீரபாண்டியில் கைத்தறி ஜவுளி பூங்கா எங்கே?
* பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை இணைப்பு பாலம் எங்கே?
* மேச்சேரி குளிர்பதனக் கிடங்கு என்னாச்சு?
* செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட்டுக்கு புது இடம் எங்கே?
* விக்கிரவாண்டி முதல் சேலம் வரையிலான எட்டு இடங்களில் இருக்கும் இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளை மாற்றாதது ஏன்?
- என்று நான் கேள்வி எழுப்பினேன். இவை அனைத்தும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் தான். அதற்கு பழனிசாமி, பதில் சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தேன். பதில் சொல்லவில்லை. ஒரு முதலமைச்சர், தான் கொடுத்த வாக்குறுதியைத் தனது தொகுதிக்கே செய்து கொடுக்காத போது தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளை இவர்கள் எப்படிக் கவனித்திருப்பார்கள்?
வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார் முதலமைச்சர். நுழைவுத் தேர்வையே கலைஞர் தான் கொண்டு வந்தாராம், ஜெயலலிதா அதை ரத்து செய்தாராம்! முதல் நாள் பிரச்சாரத்திலேயே முழுப்பொய்யைச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு முறை 1984-ஆம் ஆண்டுதான் வந்தது. அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே, நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வரப்போவதாக 1982-ஆம் ஆண்டு சொன்னார். 1984-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு வந்தது.
இந்த நுழைவுத்தேர்வு முறையைச் சட்டம் போட்டுத் தடுத்து, ரத்து செய்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 2005-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஒரு அரசாணை வெளியிட்டார். ஆனால் அதற்கு நீதிமன்றம் தடை போட்டு விட்டது. மறுபடியும் ஒரு அரசாணை போட்டார். அதையும் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. சட்டமாகப் போடுங்கள் என்று சொன்னபோது ஜெயலலிதா அதைக் கேட்கவில்லை; செய்யவில்லை.
2006-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகுதான் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, அவர்களது அறிக்கையின் படி நுழைவுத்தேர்வு ரத்து என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதற்குக் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலையும் பெற்றார்.
இந்தச் சட்டத்தை எதிர்த்தும் சிலர் நீதிமன்றம் போனார்கள். தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அதுதான் கலைஞர். தமிழகத்தில் 2007-2008 கல்வியாண்டு முதல்தான் நுழைவுத் தேர்வு இல்லை.
அதாவது 1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வை, 2007-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக ரத்து செய்த ஆட்சி தி.மு.க ஆட்சி. இது எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.
திடீரென்று சிறுபான்மையினர் மீது இவர்களுக்குப் பாசம் வந்துள்ளது. 'சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை, அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. இருக்கும்' என்று முதலமைச்சர் பழனிசாமியும், 'சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம்' என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மாறிமாறிப் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையின மக்களை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நான்காண்டு காலத்தில் சிறுபான்மையினருக்கு என்ன செய்தீர்கள்? துரோகத்தை மட்டும்தான் செய்தார்கள்.
முத்தலாக் சட்டமா? ஆதரிக்கிறோம்! காஷ்மீருக்குச் சிறப்புரிமை ரத்தா? ஆதரிக்கிறோம்! குடியுரிமைத் திருத்தச் சட்டமா? ஆதரிக்கிறோம்! என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பழனிசாமிக்கு இப்போது சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா?
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது. மாநிலங்களவை எம்.பி., நவநீதகிருஷ்ணன் ஆதரித்துப் பேசினார். “காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் கேட்கிறார்கள். இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
"என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான். இனி அந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவே மாட்டேன்" என்று கூடத்தான் ஜெயலலிதா ஒரு தடவை சொன்னார். அதுவும் ஜெயலலிதாவுடைய கனவுதான். எதற்காக பழனிசாமி மீறினார். ஜெயலலிதாவின் கனவை மீறிய பழனிசாமிக்கு, சிறுபான்மையினரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ராமநாதபுரத்திலிருந்து தேர்வுபெற்ற அன்வர் ராஜா, முத்தலாக் தடை மசோதாவை 2018-ஆம் ஆண்டு எதிர்த்துப் பேசினார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்து 2019-இல் பேசியிருக்கிறார்.
“முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். முத்தலாக் விஷயத்தில் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறது மத்திய அரசு. வகுப்புவாத அரசியலைச் செயல்படுத்த நினைக்கிறது பா.ஜ.க'' - இது, 2018-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரை!
''முத்தலாக் தடை மசோதா மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் சம உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாலினச் சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுசேர்க்கும். சமூகச் சடங்குகளைப் பெண்கள்மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும்'' - இது, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் ஆற்றிய உரை!
இதில் எது அ.தி.மு.க.வின் கொள்கை? முத்தலாக் சட்டத்தை மகனை விட்டு ஆதரிக்கச் சொன்ன பன்னீர்செல்வத்துக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா?
பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம்.
அந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதலமைச்சர். அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், கேட்டார் முதலமைச்சர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வருகின்ற ஜனவரி மாதம் மீண்டும் மத்திய அரசு உயிரூட்டப் போவதாக செய்திகள் வருகிறது. அந்த சட்டத்தால் லட்சக்கணக்கான சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். இதற்குக் காரணமான பழனிசாமிக்குச் சிறுபான்மையினரைப் பற்றிப் பேச உரிமை உண்டா?
கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார் பழனிசாமி! சபாஷ்!
இதுவரைக்கும் மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்த்துள்ளீர்களா? எதை எதிர்த்துள்ளீர்கள்?
எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பிறகு, ஆட்சி முடியப் போகும் நிலையில் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று பாடம் எடுக்கிறீர்கள்?
பழனிசாமிக்கு உணர்ச்சி வந்துவிட்டது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். இவர் தான் முதலமைச்சர் என்று சொல்லி வருவதை பா.ஜ.க.வினர் ஏற்கவில்லை. அதனால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறார் பழனிசாமி! இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் மக்கள் அறியாதது அல்ல!
நானும் விவசாயி, நானும் விவசாயி என்று தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி! அவருக்குத் தெரிந்த ஒரே விவசாயம், பண விவசாயம் தான்! ஊழல் விவசாயம் தான்!
அவர் மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது கூட முழுமையான பட்டியல் அல்ல. முதல் பட்டியல்தான். அடுத்தடுத்து பல்வேறு பட்டியல் வெளிவர இருக்கிறது. இந்த முதல் பட்டியலைப் பார்த்தே நடுங்க ஆரம்பித்துள்ளார் பழனிசாமி.
முதலமைச்சர் பழனிசாமி தனது உறவினர்கள், பினாமிகள் மூலமாக அரசாங்க டெண்டர்களை எடுத்து கோடி கோடியாக கொள்ளை அடித்துள்ளார். அவரது உறவினர்கள் யார் யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர்களது பெயரைக் குறிப்பிட்டு நான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினேன். ஆனால் அதற்கு பழனிசாமி இதுவரை பதில் சொல்லவில்லை. சுப்பிரமணியம், இராமலிங்கம், வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி, என்.ஆர்.சூரியகாந்த் ஆகிய தனது உறவினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களை வைத்து தனக்குப் பணம் வரும் வகையிலும் டெண்டர்களை வடிவமைத்துள்ளார் என்று ஆளுநருக்கு கொடுத்த அறிக்கையில் விரிவாகச் சொல்லி இருக்கிறோம்.
இப்படி நாங்கள் புகார் கொடுத்ததை அறிந்த பழனிசாமி, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று மறுத்திருக்க வேண்டும். இவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.
எனது ஆட்சியில் எந்த டெண்டரிலும் முறைகேடு இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். அதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும்.
அப்படி அவரால் சொல்ல முடியவில்லை. 'எனது உறவினர் இ-டெண்டரில் போட்டிருக்கிறார். இ-டெண்டரில் போட்டால் யாருக்கும் தெரியாது. அதனால் அவர் டெண்டர் எடுத்தது எனக்குத் தெரியாது' என்று பதில் சொல்லி இருக்கிறார். இ-டெண்டரில் போட்டால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்! இ-டெண்டரில் விண்ணப்பித்தவருக்கு அது தெரியுமல்லவா? அவர் பழனிசாமிக்குச் சொல்லி இருக்க மாட்டாரா? என்ன புத்திசாலித்தனமான பதில் சொல்லி இருக்கிறார் பழனிசாமி?
ஒருவன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினானாம். தோட்டக்காரன் பார்த்துவிட்டான். 'மாங்காய் பறிக்க வந்தேன்' என்று பொய் சொன்னானாம்! 'தென்ன மரத்தில் மாங்காய் எப்படி இருக்கும்?' என்று தோட்டக்காரன் கேட்டதும், 'அதனால் தான் இறங்கிக் கொண்டு இருக்கிறேன்' என்றானாம். அதைப் போன்ற புத்திசாலிதான் பழனிசாமி.
தன் மீது வழக்கு இல்லை என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். இவர் மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்துள்ளார் பழனிசாமி.
இதையே மறைத்து, தான் ஏதோ யோக்கியன் போலப் பேட்டி அளித்துள்ளார். அந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கினால் வழக்கை சி.பி.ஐ. எடுக்கும். அடுத்த நிமிடமே முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது நம்மை விட அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் பா.ஜ.க.வின் காலில் விழுந்து கிடக்கிறார் பழனிசாமி.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். பன்னீர்செல்வத்துக்குப் பணம் கொடுத்ததாக ஒரு அமெரிக்க நிறுவனமே சொல்லி இருக்கிறது.
பழனிசாமிக்கு போட்டியாகப் பணம் சம்பாதித்து வருபவர் ஊழலாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. அவரும் பல போலி கம்பெனிகள், பினாமி கம்பெனிகள் மூலம் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தப் பணத்தை வைத்து முதலமைச்சர் ஆகிவிடலாமா என்ற கனவிலும் இருக்கிறார். இது பழனிசாமிக்கே தெரிந்துவிட்டது.
மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து லாபம் அடைந்துள்ளார். உதிரிப் பாகங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளதற்கான ஆதாரத்தைக் கொடுத்துள்ளோம். இதில் இருந்து தப்புவதற்காக அவர் என்ன செய்து வருகிறார் என்பது அ.தி.மு.க.வினருக்கே தெரியும். அ.தி.மு.க.வின் ரகசியங்களை பா.ஜ.க.வுக்கு பாஸ் செய்து வருவதே இவர்தான் என்று அவரது கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசு கொரோனா காலத்தில் வழங்கிய அரிசியையே வெளிச்சந்தையில் விற்றுவிட்டார் என்பதற்கான முழு ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் கரன்சி லீலைகள் மத்திய அரசுக்கே தெரியும். அவர்களே பல முறை ரெய்டு நடத்தி உள்ளார்கள். அதற்கு மேல் நடவடிக்கை எடுத்தால் அவரது தப்புவதே கஷ்டம்.
வருவாய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பாரத் நெட் டெண்டர் ஊழல் அனைவருக்கும் தெரியும். இரண்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை காட்ட டெண்டர் படிவங்களில் மாற்றம் செய்தவர் அவர். மத்திய அரசே இதை தெரிந்து டெண்டரை கேன்சல் செய்தது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகும் அளவுக்கு ஊழல் குடைச்சல் கொடுத்த உத்தமர் தான் உதயகுமார்.
முந்திரிக்கொட்டை அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி ஊழல் புகார் கொடுத்துள்ளோம். சுமார் 30 கோடி வரைக்கும் அதில் ஊழல் நடந்துள்ளது என்று முதல் கட்டமாக சில புகார்களைத் தான் தந்துள்ளோம்.
இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், வெளிப்படை ஒப்பந்தப்புள்ளி விதிகள் - ஆகியவை எப்படி எல்லாம் மீறப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். இது எதையும் மறுக்க முடியாத பழனிசாமி, 'தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை' என்று பொத்தாம் பொதுவாகப் பதில் சொல்லி இருக்கிறார். பழனிசாமி பதில் சொல்லாவிட்டாலும் மக்கள் தண்டனைத் தரத் தயாராகி விட்டார்கள்!
இந்தியாவே இவரது ஆட்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறதாம். பழனிசாமி சொல்கிறார். சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவர், முதலமைச்சராக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்! யாரோ ஒருவர் தரையில் ஊர்ந்து போனாரே, அவர்தான் முதலமைச்சரா என்று பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அரசாங்க கஜானாவை இப்படி பில் போட்டு எடுக்க முடியுமா என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஒரு கேபினெட் மொத்தமும் கிரிமினல் மயமாகி இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். தலைமைச் செயலாளர் முதல் டி.ஜி.பி. வரை வழக்குகளில் சிக்கியதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அ.தி.மு.க.வாக இருந்தாலும் பா.ஜ.க. ஆட்சியாக நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். சி.பி.ஐ. வருமானவரித் துறை, அமலாக்கத்துறை என எதை வைத்து மிரட்டினாலும் பா.ஜ.க. காலில் விழுந்து கிடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
இந்த வரிசையில் இந்தியாவுக்கு இன்னொரு ஆச்சரியத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் களத்தில் துரத்தப்பட்டது என்ற அதிர்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிறார்கள்.
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலமாக நிரூபித்து எடப்பாடி கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரப்போகிறார்கள்.
இன்றைய தினம் மிக முக்கியமான நாள். இது தேசிய விவசாயிகள் தினம்! முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். சிவகங்கை கூட்டத்தின் வாயிலாக அனைத்து விவசாயிகளுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
நம்மைப் பொறுத்தவரை எல்லா நாளும் உழவர் நாள் தான். உழவர்கள் இல்லையென்றால் உலகம் இல்லை. ஆனால் இன்று உழவர்களை இல்லாமல் ஆக்குவதற்கான அத்தனைச் செயல்களையும் மத்திய பா.ஜ.க. அரசு செய்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியை உழவர்கள் உலுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அசைந்து கொடுக்காமல் இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு!
வாழவைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் வேளாண்மையை வேரறுக்கத் துடிக்கிறது பா.ஜ.க. அரசு. அந்த வேளாண் சட்டங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார் பழனிசாமி! விழுந்து விழுந்து ஆதரிப்பது என்றால் அதனைக் கூசாமல் செய்வார் பழனிசாமி!
விவசாயிகளின் கோரிக்கை ஒன்றே ஒன்று தான், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். அதில் கருத்துச் சொல்லாமல் காலம் கடத்தி வருகிறது மத்திய அரசு.
இப்படியே காலம் தாழ்த்தினால் விவசாயிகள் சோர்ந்து போய் பின்வாங்கி விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்குமானால் அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
விவசாயிகள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைக்காகப் போராடுகிறார்கள். தொடர்ச்சியாகத் தினமும் விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியமாக பார்ப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
அப்படிப் போராடுபவர்களைத் தேச விரோதிகள், அந்நியக் கைக்கூலிகள், மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவார்களேயானால் பா.ஜ.க. அரசு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது என்று அர்த்தம்!
மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வதால் பயனில்லை. அந்த மூன்றையும் திரும்பப் பெற வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை! நமது கோரிக்கையும் அதுதான்! இதுதான் மக்களின் கோரிக்கையும்!
இதனை இந்தியா முழுவதும் இருக்கிற அனைத்து விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். ஒரே ஒரு விவசாயி மட்டும் தான் ஆதரிக்கிறார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி.
எத்தனையோ துரோகங்களை பழனிசாமி செய்திருந்தாலும் விவசாயிகளுக்குச் செய்தது தான் மாபெரும் துரோகம். அந்தத் துரோகத்துக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் தரத் தயாராகி வருகிறார்கள். நானும் ஒரு விவசாயி என்று சொல்லும் எடப்பாடி அவர்களே, நீங்களும் ஒரு விவசாயியா? நீங்களும் ஒரு விவசாயியா? - என்று தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு – மக்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை நான் கேட்டிருந்தேன். இன்னும் ஏன் வழங்கவில்லை? எத்தனை நாட்கள் ஆகிவிட்டன? அதை உடனடியாக வழங்கவில்லை என்றால் தி.மு.க. விவசாய அணி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழும் தெய்வங்களாம் விவசாயிகளை வேதனைப்பட வைக்கலாமா? மக்களைக் காக்கும் விவசாயிகளை மரணக்குழிக்குள் தள்ளலாமா? - என்று தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
அதனால் தான் 'அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம்' என்ற முழக்கத்தை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறோம். இது தி.மு.க.வின் முழக்கம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் முழக்கம்!
இன்றைய தினம் காலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் 'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
காலையில் குன்னம் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன். அ.தி.மு.க. அரசின் மீதான கோபத்தையும் பார்த்தேன். தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் நேரில் பார்த்தேன்.
இரண்டும் நடக்கத்தான் போகிறது. தமிழகம் விடியத்தான் போகிறது. இருள் விலகத்தான் போகிறது!
இந்த ஜனநாயகப் போருக்குச் சிவகங்கைச் சீமை தயாராகட்டும். அ.தி.மு.க. என்ற அவமானம் துடைப்போம்! தி.மு.க. ஆட்சியை அமைப்போம்! நன்றி! வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.