தமிழ்நாடு

“மது நமக்கு என்ன தரப்போகுது?”: முதல்வரிடம் கேட்க 30 கி.மீ நடைபயணம்”- 5 சிறார்களின் நெகிழ்ச்சி போராட்டம்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி 5 சிறுவர்கள் படூர் முதல் முதல்வர் இல்லம் வரை சுமார் 30 கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

“மது நமக்கு என்ன தரப்போகுது?”: முதல்வரிடம் கேட்க  30 கி.மீ நடைபயணம்”- 5 சிறார்களின் நெகிழ்ச்சி போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

இருப்பினும், டாஸ்மாக் கடைகள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டனர். சென்னை படூர் பகுதியைச் சேர்ந்தஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி மற்றும் சுப்ரியா எனும் ஐந்து சிறார்களும் இன்று காலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியும், பள்ளிப் புத்தகப் பையையும் சுமந்துகொண்டு படூர் முதல் முதல்வர் வரை சுமார் 30 கி.மீ நடைபயணத்தை மேற்கொண்டனர்.

அப்போது முதல்வர் வீட்டை நோக்கி ஓ.எம்.ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சென்னை கண்ணகி நகர் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் காவலர்கள் சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை போலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

சிறுவர்களின் இந்தப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் சிறுவர்களின் இத்தகைய போராட்டத்திற்கு வாழ்த்துகளையும் பாராட்டுககளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசின் மோசமான இந்த நடவடிக்கை படிக்கும் குழந்தைகளுக்குக் கூட தெரிகிறது. ஆனால் தமிழக முதல்வர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை என பலரும் விமர்சித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories