கொரோனா வந்ததும் வந்தது, ஒரே தலைகீழான சம்பவங்களாக சமூகத்தில் நடந்துகொண்டு இருக்கின்றன.. நல்லனவாகவும் தீயனவாகவும்!
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி பிரதமர் மோடி கைதட்டி விளக்கேற்றச் சொன்னார். அவருடைய ஆதரவாளர்களும் ரசிகர்களும் வீட்டிலும் ரோட்டிலும் மணியடித்து ஊர்வலம் போய் பட்டாசு வெடித்து நாட்டையே அன்றைய தினம் அல்லோலகல்லோலப் படுத்திவிட்டார்கள். இதன் சாதகமான ஒரு விளைவாக, பல ஊர்களிலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மரியாதை செய்து மகிழ்ச்சியளித்து மக்கள் மகிழ்ந்தனர்.
அப்படியான இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானவர்களில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதி வசந்தாவும் ஒருவர். நகராட்சி துப்புரவுப் பணியாளரான அவர் வழக்கம்போல பணிக்குச் சென்றபோது, அங்குள்ள கணபதி நகரில் உள்ள புஷ்பா என்பவர், அவரை தாம்பூலத் தட்டுடன் வரவேற்றார். வசந்தா யோசித்து முடிப்பதற்குள் அவருக்கு பாதபூஜை செய்யத் தொடங்கினார். இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான வசந்தாவுக்கு, ஒரு பட்டுப்புடவையை தாம்பூலத் தட்டில் வைத்தும் ரூபாய் மாலையை அணிவித்தும் நன்றியை வெளிப்படுத்தினார், புஷ்பா.
பல்லடம் பாத பூஜை காட்சியை வழக்கம்போல சமூகக் கடமையாக பதிவுசெய்து, வலைதளங்களில் வரவைத்தார்கள், சிலர். அதில் வந்ததைப் பார்த்தவர்களுக்கெல்லாம் விவரிக்க முடியாத நெகிழ்ச்சி!
உணர்ச்சிவயப்பட்டு சிலர் இப்படிச் செய்யுமளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் அப்படியென்ன செய்துவிட்டார்கள் என்கிற ’பொருள்பல பொதிந்த’ கேள்விகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்களின் அத்தனை கேள்விகளுக்குமான பதிலாக, அய்யாத்துரையின் கடமையுணர்வை கட்டாயம் சொல்லிக்கொள்ள முடியும்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வி.களத்தூர் கிராமத்தில் கடந்த மாதத்தில் நிகழ்ந்த ஒரு உன்னதமான நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிவரும் அய்யாத்துரையின் தாயார் ஏப்ரல் 21 அன்று இறந்துபோனார். அந்த ஊர் மட்டுமா மொத்த நாடே முடக்கத்தால் திக்குமுக்காடியபடி இருக்க, உற்றார் உறவினர் திரள பெற்ற தாயின் இறுதிச்சடங்கைச் செய்யமுடியாத இக்கட்டு அவருக்கு..! மிகச் சில உறவினர்களுடன் சேர்ந்து சில மணி நேரத்தில் அந்தத் தாயாருக்கான இறுதிக் கடமைகளைச் செய்துவிட்டு, வேலைக் களத்துக்குத் திரும்பிவந்து தன் பணியைத் தொடங்கினார், அய்யாத்துரை.
இந்த வசந்தாக்களுக்கும் அய்யாத்துரைகளுக்கும் அந்தந்த நிகழ்வுப் பரபரப்புகளுக்கு மேல் ஒன்றுமே நிகழவில்லை என ‘உச்’ கொட்டும் அளவுக்குதான் யதார்த்தம் இருக்கிறது. இந்த அரசும் அதன் கட்டமைப்பும் உருப்படியாக ஏதாவது செய்ததா என்றால் சாதகமான பதில் ஒன்றையும் அந்தப் பக்கமிருந்து கேட்கவே முடியவில்லை, இதுவரை! இப்படித்தான் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கையானது, சோதனைகளோடும் வேதனைகளோடும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆம்.
"துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான ஒரு சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, துப்பரவுப் பணியாளர்களுக்கு மாதத்துக்கு குறைந்தபட்சமாக 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும். இதை மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டும் என மைய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. இது மட்டுமல்ல, துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 2004-ம் ஆண்டு முதல் இதுவரை 110 துப்புரவுத் தொழிலாளர்கள் இங்கு பணியின்போது இறந்துள்ளனர். அடுத்துதான், மத்திய பிரதேசம், டெல்லி, கர்நாடகம் ஆகியவை இருக்கின்றன.” - இப்படி பேசியிருப்பது துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவரோ, அவர்களின் பெயரால் இயங்கும் அரசியல் தலைவர் யாருமோ என்று நினைக்கத் தோன்றலாம். சொன்னவர், இந்திய அரசுக் கட்டமைப்பின் சுயேச்சை அதிகாரம் கொண்ட அமைப்புகளில் ஒன்றான - தேசிய துப்புரவுப் பணியாளர்களுக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி.
கடந்த மார்ச்சில் தமிழகத்துக்கு ஆய்வுக்கூட்டத்துக்காக வந்திருந்தபோது, அவர் இன்னும் பல அறிவிப்புகளை அடுக்கினார். அடுத்த ஆண்டுக்குள் துப்புரவாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வீடு, சுகாதாரம், கல்வி வசதியை வழங்குவதென இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் அதில் ஒன்று.
இப்படியான அறிவிப்புகளைக் கேட்டுக்கேட்டு சலித்துப்போய்விட்டதோ என்னவோ, நடக்கட்டும் பார்க்கலாம் என்கிற மனநிலையில் நாளாந்த வாழ்க்கையில் நகர்ந்தபடி இருக்கிறார்கள், துப்புரவாளர்கள்.
துப்புரவுப் பணியாளர்கள் எல்லாம் இனி தூய்மைப் பணியாளர்கள் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி, புதுப் பட்டம் கொடுத்து ஏழு வாரங்கள் ஓடிவிட்டன. அன்றைய தினம் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய வாக்குறுதியையாவது நிறைவேற்றுவார்களா எனக் காத்திருக்கிறார்கள், துப்புரவாளர்கள். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுடன் மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்பது முதலமைச்சரின் அறிவிப்பு. ஐந்து நாள்கள் கழித்து, இதைப் போலவே உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் சிறப்பூதியம் அளிக்கப்படும் என தெளிவுபடுத்தினார், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.
தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களைத் தவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியைச் செய்துவருகிறார்கள்.
“பொது இடங்களில் தூய்மையைப் பேணிக்காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்றத்திலே புகழாரம் சூட்டினார்.
ஆனால், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் பொதுமன்றத்தில் அமைச்சரும் அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான அரசு ஆணைகூட வெளியிடப்பட்டதாகத் தகவல் இல்லை. இதைப்போலவே, பாலபாடம் சொல்லும் பள்ளிக்கூட ஆசிரியரைப் போல, கொரோனா தொற்றாமல் பாதிக்கப்படாமல் பணியாற்ற வேண்டும் என நேற்று கூடக் கூறியிருக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி. அப்படிப் பணியாற்றுவதற்காக, முகக்கவசம் கேட்ட இராமநாதபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர் பாலு என்பவரை, உசிலம்பட்டி நகராட்சிக்கு தூக்கியடித்திருக்கிறது, இந்த அரசாங்கம்.
அய்யாத்துரையும், வசந்தாவும், பாலுவும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்குக் கிள்ளுக்கீரைகளா? தூய்மைப்பணியாளர் பட்டம்சூட்டல் எல்லாம் வாய்ஜாலமும் மாய்மாலமும்தானா?