கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து நாளைய தினம் கறுப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தி.மு.க தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டணித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் - இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆளும் அ.தி.மு.க. அரசின் அணுகுமுறைகளையும் - முடிவுகளையும் - நடவடிக்கைகளையும் பார்த்தால், கொரோனா குறித்த முழுமையான பார்வையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என தோன்றுகிறது.
கொரோனா கடுமையாகப் பரவிவரும் நிலையில், ஏதேதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி, சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர; அடிப்படையான உண்மைகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு, அனைவரையும் உணரச் செய்து, ஒத்துழைப்பைக் கோரி, உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
கொரோனாவை எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கிடக் கிடைத்த வாய்ப்பினைக் கைநழுவ விட்டார்கள்; தொடக்கத்திலேயே, தலைநகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில், தீவிரமாகப் பாதிக்கப்படப் போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை.
இது மறைமுக எதிரியுடன் நடத்தப்படும் போர்; போர்க் காலத்தில் அடி முதல் நுனி வரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும், இவற்றைப் பரவலாக்குதலும் அவசியம்! என்று குறிப்பிட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டணித் தலைவர்கள், அ.தி.மு.க. அரசில் அறிவியல்பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை; அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
போர்க் காலத்தில் அரசியலுக்கு இடமில்லை! ஆனால், அ.தி.மு.க. அரசு, அரசியல் கணக்குப் போட்டு, பல தரப்பிலிருந்தும், குறிப்பாக, எதிர்க்கட்சிகள் - ஊடகங்கள் - வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலைமை இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் காணப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஊரடங்கை, அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையைக் குறைப்பது என்பது அப்பாவிப் பொதுமக்களை நட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும்.
தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு - குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தோர், சிறு வணிகர்கள், இங்கிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றுக்கான தீர்வுகள் மத்திய மாநில அரசுகளால் சிந்திக்கப்படவில்லை. ஆனால், மே 7-ம் தேதி முதல், மதுபானக் கடைகளைத் திறப்பது என்று அரசு முடிவெடுத்துள்ளது!
இந்த முடிவின் காரணமாக சமூகத் தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால், அரசின் செயலை வன்மையாகக் கண்டனத்திற்குரியது. மார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை .
தோராயமாக இதற்கு 3,850 கோடி ரூபாய் தேவைப்படும். இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அரசுக்கு இது சாத்தியமானதே ஆகும்!
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். முன்கள வீரர்களான அவர்களுக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது.
கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் - மீட்பு நடவடிக்கை - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும்; மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும்; மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும்; அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிட்டுக் கலைவதென்றும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணர்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அ.தி.மு.க. அரசின் கண்களைத் திறக்கட்டும்! என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.