டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து இந்தியாவிற்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது. டேபிழ் டென்னிஸில் இந்திய வீராங்கனைகள் இருவர் களமிறங்கியிருந்தனர். இருவருமே தோல்வியை தழுவியிருக்கின்றனர்.
C3 பிரிவில் பங்கேற்றிருக்கும் சோனல் படேல் சீன வீராங்கனையான லீ குவானுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியிருந்தார். மொத்தம் 5 கேம்கள். இதில் 2-3 என சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் சோனல்.
தோற்றிருந்தாலும் இவர் ஆடிய விதமும் அவரின் போர்க்குணமும் பெரிதாக அனைவரையும் கவர்ந்திருந்தது. டேபிள் டென்னிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நாடு சீனா. அந்த நாட்டின் வீராங்கனைக்கு எதிராக அவருக்கே தோல்வி பயத்தை கொடுக்குமளவுக்கு ஆடியிருந்தார் சோனல்.
முதல் கேமை 11-9 என்ற வகையில் வென்று தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது செட்டை லீ குவான் வென்றிருந்தார். போட்டி 1-1 என சமநிலையிலிருந்தது. இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது கேம்தான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது என சொல்லலாம்.
மூன்றாவது கேமின் தொடக்கத்தில் 1-5 என சோனல் பின்னடைவையே சந்தித்திருந்தார். ஆனால், அப்படியே விட்டுவிடவில்லை. அங்கிருந்து மீண்டு வந்து தொடர்ச்சியாக 5 புள்ளிகளை பெற்று 6-5 என லீட் எடுத்தார். இதன்பிறகு, இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ஆட்டம் நீண்டு கொண்டே இருந்தது. இருவரும் விடாப்பிடியாக ஆடினர். 9-9, 10-10 என சரிசமமாகவே சென்று கொண்டிருந்த ஆட்டத்தை 17-15 என சோனல் வென்றார்.
நான்காவது செட்டை லீ குவான் வென்றுவிட போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது. முடிவௌ தீர்மானிக்கப்போகும் கடைசி கேம் தொடங்கியது. இதில் ஆரம்பத்திலிருந்தே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 4-11 என இந்த கேமை இழந்து 2-3 என போட்டியையும் இழந்தார் சோனல் படேல்.
தோற்றிருந்தாலும் அந்த மூன்றாவது கேமில் சோனல் வெளிக்காட்டிய போர்க்குணத்திற்காகவே அவரை கொண்டாடலாம். இன்னொரு போட்டியில் C3 பிரிவில் இந்திய வீராங்கனை பவினா படேல் சீன வீராங்கனையான சூ யிங்குடன் மோதினார். ஆரம்பத்திலிருந்தே சீன வீராங்கனையின் கையே ஓங்கியிருந்தது. இதனால் 0-3 என நேர் செட் கணக்கில் இந்த போட்டியை பவினா இழந்தார்.
இரண்டாவது செட்டில் மிகச்சிறப்பாக ஆடி நெருங்கி வந்திருந்தார். அந்த செட்டை சரியாக முடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் சவாலளித்திருக்க முடியும். பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல்நாள் தோல்வியுடன் முடிந்திருக்கிறது. ஆனால், பதக்க நம்பிக்கையுள்ள போட்டிகள் இனிதான் தொடங்கவிருப்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
-உ.ஸ்ரீ