ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பின் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 3 வங்கதேச வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்கள் மீது ஐ.சி.சி ஒழுங்கு விதிமீறல் நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது. 4 முறை சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்கவைக்கும் என்ற கனவை தகர்த்து, வரலாற்று சாதனையை அரங்கேற்றினர் வங்கதேச வீரர்கள்.
போட்டிக்கு பின் வெற்றியை கொண்டாட மைதானத்திற்குள் வந்த வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களிடம் வெற்றி களிப்பில் தகாத முறையில் நடந்து கொண்டதால், சற்று சலசலப்பு ஏற்பட்டது. வங்கதேச வீரர்களின் இந்த அநாகரீகமான செயல் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான செயலாக பார்க்கப்பட்டது. மிகச்சிறந்த போட்டி வெட்கக்கேடாக முடிந்ததாகவும் இணையத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில், இந்திய-வங்கதேச அணி வீரர்களின் மோதல் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது ஐ.சி.சி. அப்போது, மைதானத்தில் சலசலப்பில் ஈடுபட்டதாக Towhid Hridoy, Shamim Hossain, Rakibul Hasan ஆகிய 3 வங்கதேச வீரர்களும், ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகிய 2 இந்திய வீரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, ஐ.சி.சி, ஒழுங்கு விதிமீறல் நடவடிக்கையின் படி, வங்கதேச அணி வீரர்கள் 6 டெமிரிட் புள்ளிகளையும், இந்திய அணி வீரர்கள் இருவர் 5 டெமிரிட் புள்ளிகளையும் இழக்கின்றனர் என்றும், இந்த நடவடிக்கை அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர்கள் விளையாடும் போட்டிகளில் எதிரொலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் பிரிவில் இந்தியாவுடனான போட்டியில் வங்கதேச வீரர்கள் பாம்பு நடனமாடி, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை போல, ஜூனியர் வீரர்களும் இவ்வாறு நடந்து கொள்வது கிரிக்கெட் அரங்கில் சற்று முகம் சுழிக்க வைத்துள்ளது.