இந்தியாவின் ஜூனியர் கிரிக்கெட் அணியின் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். 2K கிட் ஆன ஜெய்ஸ்வால், அண்மையில் முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை தொடர் மூலம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் பார்வையையும் தன் மீது திருப்பியுள்ளார்.
ஒரு உலகக்கோப்பை தொடர் என்பதை விட, ஒரு சதம் ஒட்டுமொத்த மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்பதை வெறும் ஒற்றை வரியில் கடந்துவிட முடியாது. அதன் பின்னால் இருக்கும் வலிகளும், சவால்களும் ஏராளம். அப்படித்தான், சவால்களையும், வலிகளையும் கடந்து சாதித்திருக்கிறார் இந்த 2K கிட் ஜெய்ஸ்வால்.
2001ல் உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் பிறந்த ஜெய்ஸ்வால், கிரிக்கெட் மீதான மோகத்தால் மும்பைக்கு குடிபெயர்ந்தார். ஆனால், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலை. கிரிக்கெட் ஆர்வம் மட்டும் எந்தச் சூழலிலும் ஜெய்ஸ்வாலை விட்டு விலகியதில்லை. முழுமையான பயிற்சி, டயட், தேவையான உபகரணங்கள் போன்ற வசதிகள் இல்லை என்றாலும், கடைகளில் வேலைசெய்து கொண்டே, கிரிக்கெட்டும் விளையாடினார்.
மைதானத்தின் அருகே டென்ட்டில் தங்கியும், பானி பூரி விற்றும் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்த ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைக் கண்டறிந்த பயிற்சியாளர் ஜூவாலா சிங், அவருக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். 2015ல் நடந்த Gills Shield கிரிக்கெட் தொடரில் 319 ரன்களும், பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்ததோடு லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றார் ஜெய்ஸ்வால்.
2018ல் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பையில் 318 ரன்கள், 2019ல் நடந்த இளம் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக 273 ரன்கள் என தன்னுடைய திறமையை மேம்படுத்திக்கொண்டார்.
முதல் தர கிரிக்கெட் போட்டிகளான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி போன்ற தொடர்களும் ஜெய்ஸ்வாலுக்கு கைகொடுத்தன. மும்பை அணிக்காக 2019 விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய ஜெய்ஸ்வால் ஜார்க்ண்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதமடித்ததோடு விஜய் ஹசாரே தொடரில் குறைந்த வயதில் இரட்டை சதமடித்த நாயகன் எனவும் புகழ் பெற்றார்.
அந்தத் தொடரில் மட்டும் 6 போட்டிகளில் 564 ரன்கள் குவித்தார். இதுவே ஜெய்ஸ்வாலின் அசாத்திய சாதனை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட இடம் இது என்றே சொல்லலாம். இதன் பலனாக, ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்று விளையாடிய ஜெய்ஸ்வால் தொடரில், மொத்தம் 6 போட்டிகளில் 4 அரை சதம், ஒரு சதம் என விளாசி 400 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.
சாதிக்க வேண்டும் என வெறும் வார்த்தைகளால் கூறினால் போதாது. கிடைக்கும் வாய்ப்பிலும் செயல் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை, கிடைத்த வாய்ப்பின் மூலம் வெற்றிகரமாகச் செய்துகாட்டினார் ஜெய்ஸ்வால்.
தொடரின் தொடக்கம் முதலே மீடியாக்களையும், வர்ணனையாளர்களையும் தன் பெயரையே உச்சரிக்க வைத்த ஜெய்ஸ்வால், பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சரை பறக்கவிட்டு சதமடித்து அசத்தி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற தருணம்தான் உச்சகட்டமானதாகப் பார்க்கப்பட்டது.
இறுதிப்போட்டியிலும் ஜெய்ஸ்வால் மீதான ரசிகர்களின் ஆர்வத்திற்கு அவர் ஏமாற்றம் அளிக்கவில்லை. 88 ரன்கள் எடுத்து அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்தார். நடப்பு U19 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகனாகவும், அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் பெயர் பெற்றார்.
இந்த நாயகனின் சாதனைகளை முன்கூட்டியே அறிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இவரை 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதுவரை பானி பூரி விற்றவராக பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், சர்வதேச அரங்கை அதிர வைக்க தன் வேட்டையைத் தொடங்கியுள்ளார். ஐ.பி.எல் தொடரும் ஜெய்ஸ்வாலுக்கு கைகொடுக்கும் என்றே நம்பலாம்.
வறுமை, முறையான பயிற்சி பெறும் சூழல் இல்லாமை என ஒட்டுமொத்த ஏழ்மையையும் தன் பின்னால் சுமந்து, இன்று உலகமே உற்றுநோக்கும்படியாக உயர்ந்திருக்கும் ஜெய்ஸ்வால், சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு வீரருக்கும் உதாரணம்தான். பெரும் கனவுகளைக் கொண்ட இந்தப் போராளியை பொறுத்தவரை இது வெறும் ட்ரெய்லர் மட்டுமே.