தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதிய ஆட்டம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இந்திய அணி 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
வங்கதேச அணி எளிதாக வெற்றியை நோக்கி விளையாடிய வேளையில், மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, வங்கதேச அணி முதன்முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது.
4 முறை சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து, வரலாற்றுச் சாதனையை அரங்கேற்றினர் வங்கதேச வீரர்கள்.
போட்டிக்குப் பின் வெற்றியை கொண்டாட மைதானத்திற்குள் வந்த வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களிடம் வெற்றிக் களிப்பில் அநாகரிகமாக நடந்து கொண்டது, சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
வங்கதேச வீரர்களின் இந்த அநாகரீகமான செயல் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக பார்க்கப்பட்டது. மிகச்சிறந்த போட்டி வெட்கக்கேடாக முடிந்ததாகவும் இணையத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.
வரலாறு படைத்தது வங்கதேசமாக இருந்தாலும், இதயங்களை வென்றது என்னவோ இந்தியாதான் என்கின்றனர் இந்திய ரசிகர்கள்.