இந்தியாவின் பிரதமராக விளங்கும் மோடியின் நெருங்கிய நண்பரும், உலக பணக்காரர்களில் மிகவேகமாக வளர்ச்சியடைபவருமான அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசிற்கும், அதானி குழுமத்திற்கும் தவிர்க்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது, வானூர்தி நிலையங்கள், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், இராணுவ தளங்கள், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அரசு உடைமைகள் பல அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டதிலிருந்தே அறியக்கூடியதாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன என்ற தகவலை வெளியிட்டது. இதனால், அதானியின் பங்குகள் ஏற்றம் கண்ட வேகத்தில், இறக்கம் கண்டது.
அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த குளறுபடிகள் குறித்த தீவிர விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததற்கு, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) விசாரணை செய்ய உத்தரவிட்டது.
இறுதியில் செபி தலைவரும் கூட அதானி குழுமத்தில் பங்குதாரர்தான் என்ற தகவலையும் வெளிப்படுத்தியது SEBI. எனினும், இது தொடர்பாக ஒன்றிய அரசு, இதுவரை எவ்வகையான தகுந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்பொது, அமெரிக்காவின் FBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் சோலார் நிறுவனம் தொடங்க, அதானி குழுமத்தால் பல கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செய்லாளர் ஜெய்ராம் ரமேஷ், “அதானி குழுமம் சூரிய மின்திட்டத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை தேவை. அதானி ஊழல் மீது விசாரணை தேவை என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதானி எதிராக அமெரிக்க புரூக்லின் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை எதிரொலியாக, அதானி குழுமம் நிறுவனங்களின் பங்குகளின் விலை 10 விழுக்காடு முதல் 28 விழுக்காடு வரை சரிவு.