மக்களவைத் தேர்தல் 2024 மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களாக மகாராஷ்ரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன.
இவ்விரு மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வேளையிலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இடைத்தேர்தல்களை பொறுத்தமட்டில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல், உத்தரப் பிரதேசத்தின் 9 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் உள்ளிட்டவை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்தன.
அவ்வாறு, மிகுந்த எதிர்பார்ப்புடன் உத்தரப் பிரதேசத்தின் 9 தொகுதிகளில் நேற்று (நவம்பர் 21) வாக்குப்பதிவு நடைபெற்ற போது, பா.ஜ.க அரசின் கீழ் செயல்படும் காவல்துறையினர் தடி மற்றும் துப்பாக்கி ஏந்தி பெருவாரியான வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் இடைமறித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக இஸ்லாமியர்களையும், இதர சிறுபான்மையினர்களையும் வாக்களிக்க விடாமல் தடுத்த காணொளிகளை இணையத்தில் வெளிக்காட்டியது, உத்தரப் பிரதேச சட்டபேரவை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி.
காணொளி ஆதாரங்கள், பா.ஜ.க அரசின் காவல்துறையினர் கட்டவிழ்த்த அட்டூழியங்களை உறுதிப்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு, 5 உத்தரப் பிரதேச காவலர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் இடையூறால், உத்தரப் பிரதேசத்தின் 9 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவின் சராசரி 50 விழுக்காட்டிற்கும் குறைவாகி, 49.3 விழுக்காடாக நின்றது.
இந்நிகழ்வு, மக்களின் வாக்குரிமை பறிப்பை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க அரசின் கொடுங்கோன்மையையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.