திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் சார்ந்த எந்த நல்லத் திட்டங்கள் வந்தாலும், அதனை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். மேலும் இல்லாத பொல்லாததை கூறி அவதூறுகளையும் பரப்பி வருகிறார். இப்படி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பழனிசாமிக்கு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடப்பாடி பழனிசாமியா? – எரிச்சல்சாமியா? என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார் எதிர்கட்சித் தலைவர் என்று காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
“மக்களை சந்திக்காத முதலமைச்சர் வரலாற்றிலே இவர் மட்டும்தான், இவருக்கு நிகர் இவரே என்று சொல்லக்கூடிய அளவுக்கு திறன் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் ஆட்சிக்காலத்தில் மக்கள் சந்தித்த இன்னல்களை பட்டியலிட மனம் வலிக்கிறது. இன்னல்களுக்கு மருந்தாக மக்கள் அளித்த தீர்ப்பே திராவிட மாடல் ஆட்சி.
மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய், அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்....! - என்றார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள் நாங்கள். திராவிடமாடல் ஆட்சியில் மருத்துவ துறையில் எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை படைத்துவருவது மக்களுக்கு புரிகிறது. சில மண்டூளிகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூறுகிறேன்.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காபோம் – நம்மைக்காக்கும் – 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.
- இப்படி பக்கம் பக்கமாக திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத்துறையில் உருப்பெற்ற திட்டங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இது மட்டுமின்றி இத்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும் எடப்பாடி அவர்களுக்கு நாக்கு தள்ளும் என்பதில் ஐயமில்லை, பழனிசாமி அவர்களுக்கு இது எல்லாம் புரியுமா என்று தெரியவில்லை, இருந்தாலும் சொல்ல வேண்டியது நம் கடமை.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டங்களில் ஒன்றான மக்களைத்தேடி மருத்துவம் ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டபெற்று அதற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மருத்துவத்துறையின் சாதனை ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டுள்ளது.
இந்த விருது என்பது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிந்திருப்பாரா என்பது ஐயமே!. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவர் அறிக்கையில் குறிப்பிடும் தகவலை போல் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு ஒன்றிய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகள் சாட்சி. உதாரணத்திற்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது (NQAS – National Quality Assurance Standards certificate) தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 614, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 545. அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் (LAQSHYA- Labour Room Quality Improvement Initiative) தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 84, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 55.
உதாரணத்திற்காக சொல்லப்படும் இவை பத்து ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கும் மூன்றரை ஆண்டுகால பேரறிஞர் அண்ணா வழியில் நடைபெறும் மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியின் சிறப்பை உணர்ந்த மக்கள், தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்கள் அதன் காரணமாக அரசு மருத்துவமனைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தாங்கள் செய்ய நினைக்கும் அர்ப்ப அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள்.
எதிர்கட்சித் தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எதையும் அறியாமல் புரியாமல் அறிக்கை வெளியிடுவது காரணமாக எடப்பாடி பழனிசாமி – எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.