அ.தி.மு.க ஆட்சியின்போது 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை அமைச்சராக கே.சி.வீரமணி இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது திருவண்ணாமலை, வேலூர், ஏலகிரி, ஜோலார்பேட்டை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 34 நான்கு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்நியச் செலாவணி பணம், 5 கம்ப்யூட்டர்கள், 5 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சோதனையின் போது 47 ஏழு கிராம் வைர நகை, 4.987 கிலோ தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளி நகைகள், ரோல்ஸ் ராய் உட்பட 9 சொகுசு காரையும் கண்டறிந்துள்ளனர். மேலும் அமைச்சரின் வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 275 யூனிட் மணலையும் சோதனையின்போது கண்டறிந்து உள்ளனர்.
இதனையடுத்து, நேற்று இரவு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் கே.சி.வீரமணி வீட்டின் பின்புறம் கொட்டிவைக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்ததில் 551 யூனிட் மணல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தரம் பிரிக்கும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் மொத்த மதிப்பீடு கணக்கிடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இல்லத்தில் இருந்து 1.80 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தப் பணம் எவ்வாறு கே.சி.வீரமணிக்கு கிடைத்தது அல்லது அந்நிய செலாவணி பணப்பரிவர்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலிஸாரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.