திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் செப்., 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில், ரொக்கப்பணம், அந்நிய செலாவாணி டாலர், 9 சொகுசு கார்கள் (ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட), 5 கம்ப்யூட்டர் ஹார்டு - டிஸ்க்குகள், சொத்துகள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், தங்க வைர நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மேலும், கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 275 யூனிட் மணல் சிக்கியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கனிமவளத்துறைக்கு தகவல் கொடுத்தது.
அதன் பேரில் நேற்று இரவு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் கே.சி.வீரமணி வீட்டின் பின்புறம் கொட்டிவைக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்ததில் 551 யூனிட் மணல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் அரசு மதிப்பு ஒரு யூனிட் ரூ. 2,000 என்றும் சந்தை மதிப்பு ரூ.4,000 முதல் ரூ.6000 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு 33,06,000 ஆகும். இதன் மதிப்பு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாறும்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடங்க உள்ளது.
என்ன பயன்பாட்டுக்காக மணல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பில் இருக்கிறதா என விசாரணை தொடங்கும். பில் இல்லாத பட்சத்தில் வருவாய்த்துறை மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.