அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 -2021 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்துள்ளதாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலிஸிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
2011ஆம் ஆண்டு கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.7.48 கோடி ஆகும். பின்னர் 2011-2021 வரை கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.91.20 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல், கே.சி.வீரமணி பெயரில் வாங்கப்பட்டுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4,06,27,147 ஆக உள்ளது. அதேபோல் இவரின் உறவினர் கே.ஏ.பழனி பெயரில் ரூ.92.21.593 மதிப்புள்ள அசையும் சொத்து வாங்கப்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தாய், மனைவி பெயர்களிலும் மோசடி செய்து சொத்துகளைக் குவித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் ரூ.100க்கு 0.1 ஏக்கர் நிலம் முன்னாள் அமைச்சர் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் பாப்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட் க்கு 2017-இல் சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் ரூ. 15 கோடி செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.