அரசியல்

ஆட்சி முடியும் சமயத்தில் பணத்தை அள்ளும் டெண்டர் அரசு : அழிவு பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தின் நிதிநிலை!

மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் அச்சமே அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், இவர்கள் செய்த ஊழல் வினைகளுக்கெல்லாம், மத்திய அரசு எங்கே தங்களை தண்டித்து விடுமோ என்ற போக்கே அதிகமாக உள்ளது.

ஆட்சி முடியும் சமயத்தில் பணத்தை அள்ளும் டெண்டர் அரசு : அழிவு பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தின் நிதிநிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒட்டுமொத்த அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு மட்டும் நன்மை விளைந்ததே தவிர தமிழக மக்களுக்கு, எந்த விதமான நன்மையும் இந்த அரசால் நடக்கவில்லை என தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.கணேசன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள அவரது கட்டுரையில், “ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது கடந்த கால செயல்பாடுகள் குறித்து எந்தவித ஆய்வும் இந்த அரசு செய்வதில்லை. ஆனால், ஊதாரித்தனமாக செலவுகளை மேற்கொள்வதில், எந்தவித சலனமும் இருப்பதில்லை. முக்கியமாக மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் மோசமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத இந்த அரசு பொங்கலையொட்டி, தேர்தலை மனதில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கியது. கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு, ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு சில குடும்பங்களுக்கு பாதி தொகை மட்டுமே தந்தது. திட்டங்களை முன்மொழியும்போது அதற்கான காலநிர்ணயம் செய்யாமல் திட்டத்தை தொடங்கும் போது இருக்கும் திட்ட மதிப்பீடு முடிகிற காலத்தில் கூடுதலாக மதிப்பீட்டை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலமாக டெண்டர் எடுக்கும் கான்ட்ராக்டர்கள் அதிகமான பணத்தை திட்ட மதிப்பிட்டோடு கூட்டி அதில் இருந்து ஆட்சியாளர்களுக்கு பங்கு போகும் நிலையை இந்த அரசு ஏற்படுத்துகிறது. பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, கலால்துறை வருவாய் வரும் முக்கியத்துறை. இதில், கலால்துறை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் தள்ளாடும் நிலைக்கு வைத்துள்ளது.

டாக்டர் கலைஞர் 2011ல் ஆட்சியில் இருந்து விலகும் போது, கடன்சுமை ரூ.1.15 லட்சம் கோடி தான். இதில், அ.தி.மு.க. ஆட்சி நடந்த 1991-1996, 2001-2006, அதன் பின்னர் தற்போதைய 10 ஆண்டுகால ஆட்சியில் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. இவர்கள் ஒட்டுமொத்த செலவிடும் தொகைகளை கணக்கு கூட்டி பார்த்தால் இந்த ஆண்டு மிதமிஞ்சிய பற்றாக்குறையே ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆண்டில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட்டில் கடன் வாங்கி இவர்கள் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். திட்டங்களுக்காக கடன் வாங்க முக்கிய நோக்கம் என்னவென்றால், இது டெண்டர் அரசு.

ஒவ்வொரு காலகட்டத்தில் டெண்டர் மூலமாக செய்யாத வேலைக்கு பணம் எடுப்பது, போடாத வேலைக்கு பணம் எடுப்பது, தரமில்லாத கட்டுமான வேலையை செய்வதும், தரமில்லாமல் முடிப்பதும், கான்ட்ராக்டர்கள் கூட்டு சேர்ந்து கிட்டத்தட்ட நிதி ஆதாரங்களை சுரண்டும் போக்கே அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. "கருவியும் காலமும், செய்கையும் செய்யும் அறிவினையும் மாண்டது அமைச்சு’’ என்று பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கொள் காட்டிவிட்டு, இந்த குரலுக்கு ஏற்றப்படி இந்த அரசு செயல்பட்டதா என்றால், ஒரு செயலை செய்ய தேவையான பொருட்கள், அந்த செயலை செய்ய ஏற்றக்காலம், செய்யும் முறை, செய்யும் செயல் அனைத்தும் நன்மை விளையும்படி எண்ணுவோரே நல்ல அமைச்சர் என்பது இந்த குறளின் அர்த்தம்.

ஆட்சி முடியும் சமயத்தில் பணத்தை அள்ளும் டெண்டர் அரசு : அழிவு பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தின் நிதிநிலை!

ஒட்டுமொத்த அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு மட்டும் நன்மை விளைந்ததே தவிர தமிழக மக்களுக்கு, எந்த விதமான நன்மையும் இந்த அரசால் நடக்கவில்லை. அதே போன்று மத்திய அரசில் இருந்து, மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் அச்சமே அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், இவர்கள் செய்த ஊழல் வினைகளுக்கெல்லாம், ஒட்டு மொத்த மத்திய அரசு எங்கே தங்களை தண்டித்து விடுமோ என்ற போக்கே அதிகமாக உள்ளது. ஒரு நல்ல அரசில் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் அரசானது அமைந்துவிடும். இவர்கள் காலத்தில்தான் தொடர்ந்து வெள்ளம், இயற்கை இடர்பாடுகள், அதே போன்று தொற்றுநோய் மக்களை வாட்டி எடுத்தது.

முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாத நிலையில், நோய்கள் பரவிய பின்னர் அதற்கான செலவினங்களாக, கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். ஆனால், இறப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகத்தில் தான் உள்ளது. அதேபோன்று தேவையில்லாத எட்டு வழிச்சாலை திட்டம் போன்ற மத்திய அரசு திணிக்கும் திட்டங்களை எல்லாம் ஆதரித்து அதன் மூலம் மக்களுக்கு பெரும் துயரையே விளைவித்து வருகிறது இந்த அரசு. ரூ.5.70 லட்சம் கோடி கடன் என்பது உத்தேச மதிப்பே ஆகும்.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பார்த்தோமேயானால் எல்லா விதத்திலும் சரியான செலவினங்கள் மேற்கொள்ளாமல் பாதியிலேயே தான் நின்று இருக்கும். ஒவ்வொரு அ.தி.மு.க. ஆட்சியிலும் இதே நிலைதான். இதனால், அடுத்து தி.மு.க. ஆட்சி வரும் போது, இதற்கு பொறுப்பேற்பதும் கடந்த காலங்களில் இருந்தது. ஏனென்றால் இவர்கள் ஆட்சி முடியும் தருவாயில் எல்லா நிலையிலும் கமிஷன் பெறவேண்டும் என்கிற தீய நோக்கத்தில் இவர்கள் பெரும் பணத்தை அள்ளிச்சென்று விடுகின்றனர். இது மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பணம். இந்த காரணத்தால் நிதி நிலை அழிவு பாதையை நோக்கி செல்கிறது.

கிட்டத்தட்ட 1 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர். இதனால், மொத்த உற்பத்தியானது பன்மடங்கு சரிந்துள்ளது. இதை தூக்கி நிறுத்தவே 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும். குறிப்பாக, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தேவையான ஓய்வூதிய பலன்களை அளிப்பதிலும், புதிய பென்ஷன் திட்டத்தின் மூலம் ஊழியர்ளிடம் இருந்து திரட்டப்பட்ட தொகையை, இவர்கள் எந்த கணக்கில் வைத்துள்ளனர் என்பது போக, போகத் தான் தெரிய வரும். இந்த அரசு தேவையில்லா திட்டங்களுக்கு செலவழிப்பதும், தேவையில்லாத திட்டங்களுக்கு திட்டமிடுவதும் முக்கிய நோக்கமாக செயல்படுகிறது. இந்த திட்டத்தால் மக்களுக்கு நன்மை பயக்கிறதா என்று பார்த்தால் சுத்தமாக இல்லை.

காரணம், இவர்களின் ஒட்டுமொத்த குறிக்கோள் என்னவென்றால், இப்போது பணம் திட்டமதிப்பீடு போட்டால் அதில் 40 சதவீதம் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறது. எல்லா மட்டத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தவறான வழியில் பணம் சம்பாதிக்க, துணைபோகின்றனர். ஒவ்வொரு திட்டத்திலும் பணம் எடுக்காமல் இருப்பதே இல்லை. ஒரு திட்டம் ரூ.500க்கு போடுகிறார்கள் என்றால் ரூ.450 சம்பந்தப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும். ஆனால், சில நேரங்களில் ரூ.400ம் போவதில்லை. சில நேரங்களில் திட்டம் செயல்படாத நிலையில், அந்த திட்டத்துக்கான பணத்தை அப்படியே எடுத்தும் விடுகின்றனர்.

விழுப்புரத்தில் தென்பெண்ணையாற்றில் தடுப்பனை உடைந்து விழுந்தது. இந்த தடுப்பணைக்கு ரூ.25 கோடி நிதி என்றால், அதில் ரூ.10 கோடிக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர் வரை பிரித்து கொள்கின்றனர். முதலில் பங்கு பிரித்துதான் வேலையை தொடங்குகின்றனர். மேலும், இவர்கள் டெண்டரை முதலில் ஃபிக்ஸிங் செய்துதான் தருகின்றனர். இந்த அரசின் நடவடிக்கையால் அடுத்து வரும் அரசுக்கு நெருக்கடி இருக்கும். இருந்தாலும், 1991-96ல் அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கடனில் இருந்து, தமிழகத்தை தி.மு.க. ஆட்சி மீட்டு உபரி வருவாயாக தான் வைத்திருந்தார் டாக்டர் கலைஞர்.

அவர் எந்த திட்டத்துக்கும் பணம் இல்லை என்று கூறவில்லை. அனைத்து திட்டத்துக்கும் தேவையான நிதியை அளித்தார். நிதி ஆதாரங்களை திரட்டும் போது, சரியாக செலவு செய்வதால் பிரச்சினை வராது. குறிப்பாக, ஊழல் இல்லாமல் ஆட்சி செய்தால் தமிழகத்தின் நிதி ஆதாரத்தை திரட்ட முடியும். தமிழக மக்கள் வரி செலுத்துவதில் எல்லா விஷயத்தில் நம்பர் 1 ஆக உள்ளனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.

குழந்தைக்கு வாங்கும் நாப்கின், உயிர் காக்கும் மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கின்றனர். அப்படி வரி கட்ட தயாராக இருக்கும் மக்களுக்கு பணம் போய் சேருகிறதா என்றால் ஜீரோ தான். அடுத்து தி.மு.க. அரசு பொறுப்பேற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு எங்கெல்லாம் பணம் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கண்டிப்பாக அதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - தினகரன் நாளேடு

banner

Related Stories

Related Stories