எடப்பாடி பழனிசாமி, தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என்று மாற்றிக்கொள்ளலாம். அந்தளவுக்கு கடன் வாங்குவதில் கில்லாடி ஆகிவிட்டார். இவரதுஆட்சிக் காலம் என்பது கடன் கொடுப்பவர்களின் பொற்காலம் ஆகிவிட்டது!
“நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள்செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும்வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ளார்கள் முதலமைச்சர் பழனிசாமியும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும்.
ஆறாவது சம்பளக்கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு, வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் தமிழகமக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப் பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைதான் தமிழகத்தின் கவலைக்கிடமான, உண்மையான நிதிநிலை அறிக்கை ஆகும்.
2006 - 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால், தற்போது அ.தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் ரூ.3.55 லட்சம் கோடி! 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் கடன் தொகை எப்படி ஏறிக் கொண்டு வருகிறது என்பதைப் பாருங்கள்!
2011 - 12 - கடன் ரூ.1,02,439 கோடி
2012-13 - கடன் ரூ.1,20,204 கோடி
2013-14 - கடன் ரூ.1,40,041 கோடி
2014-15 - கடன் ரூ.1,95, 290 கோடி
2015-16 - கடன் ரூ.2,11,483 கோடி
2016-17- கடன் ரூ.2,52,431 கோடி
2017-18 - கடன் ரூ.3,14,366 கோடி
2018 -19 - கடன் ரூ.3,55,844 கோடி
2019-20 - கடன் ரூ.3,97,495 கோடி
2020 -21 - கடன் ரூ.4,56,000 கோடி - பழனிசாமியின் சாதனை என்பது இதுதான்!
தி.மு.க ஆட்சியில் 438.78 கோடி ரூபாய் உபரி வருவாயுடன் நிதி நிலை அறிக்கையை விட்டுச் சென்றோம். இன்று வருவாய் பற்றாக்குறை 65,994.06 கோடி ரூபாய். தி.மு.க. ஆட்சி விட்டுச் சென்ற மொத்தக் கடன் ரூ.1,01,541 கோடி. தற்போது அ.தி.மு.க. ஆட்சி விட்டுச் செல்லும் கடன் 5,70,189.20 கோடி ரூபாய். இந்த ஆண்டும் இவர்கள் சும்மா இருக்கப் போவது இல்லை. 88 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளார்கள். கடன் வாங்கக் கூடாது என்பது இல்லை. அடைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவர்களுக்கு அடைக்கத் தெரியாது என்பது மட்டுமல்ல, அடைக்க விரும்பவுமில்லை.
கிரடிட் கார்டு வந்த புதிதில் பலரும் அதனை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அதன் மூலமாக பொருள்களை வாங்கிக் குவித்தார்கள். பிறகு பணம் கட்ட முடியாமல் தவித்தார்கள். அதை அடைப்பதற்காக புதிய கிரடிட் கார்டு வாங்கினார்கள். அதாவது கடன் அடைக்க கடன் வாங்கப்பட்டது. கடன் தொகை அதிகமானதும் வட்டி கட்ட புதிய கிரடிட் கார்டு வாங்கினார்கள். அதன் பிறகு மொத்தமாக கடன் வாங்கி, மொத்தமாக எல்லா கிரடிட் கார்டையும் அடைத்து, அந்த அட்டையையே உடைத்துப்போட்டார்கள். அப்படித்தான் தமிழக நிதி நிர்வாகத்தையே உடைத்து சுக்குநூறாக ஆக்கிவிட்டார்கள் பழனிசாமியும், பன்னீர்செல்வமும்.
கிரடிட் கார்டு வாங்கியவர்களுக்காவது அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற, அவசரத் தேவைக்கான கடனாக அவை இருந்திருக்கும். ஆனால், பழனிசாமி கடன் வாங்கியது எல்லாம், அவை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதற்காக அல்ல. பினாமிகளுக்கு டெண்டர் விட்டு அந்தப் பணத்தையும் தங்களுக்கு வசதியாக திருப்பிக் கொண்டார்கள்.
அடுத்த ஆண்டு கடன் தொகையானது ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்று பன்னீர்செல்வம் சொல்கிறார் என்றால் எப்படி இதைக் கூச்சமில்லாமல் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. கடன் ஏன் வாங்க வேண்டி இருக்கிறது என்று காரணம் கண்டுபிடித்திருக்கிறார் பன்னீர்.
கொரோனா வந்ததால் கடன் வாங்கிவிட்டார்களாம். கொரோனா என்பது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்தானே வந்தது. அதற்கு முந்தைய ஒன்பது ஆண்டு காலம் எதற்காக இவ்வளவு கடன் வாங்கினீர்கள்? “கொரோனா நோய்த்தொற்று தமிழக அரசின் வருவாயைக் குறைத்துவிட்டது. மக்களின் நலன்களைப் பாதுகாக்க செலவினங்கள் அதிகரித்துள்ளது. அதனால் கடன் பெறுவது தவிர்க்க முடியாதது” என்கிறார். மக்களின் நலனைப் பாதுகாக்க என்ன செலவினம் செய்தார்கள்? டெண்டர் விட்டார்களே அதைச் சொல்கிறாரா?
கொரோனாவால் திடீர் செலவு வந்துவிட்டது என்றும் காரணம் காட்ட முடியாது. மொத்தமே 12 ஆயிரம் கோடி தான் இவர்களுக்கு கூடுதலாக செலவாகி இருக்கிறது. அரசின் வருவாயை பெருக்குவதற்கான வழிகள் என்ன என்று சொல்லப்பட்டதா? இல்லை! வணிக வரியைக்கூட்டுவது, டாஸ்மாக் விற்பனையைக் கூட்டுவது - இவை இரண்டும்தான் அவர்களுக்குத் தெரிந்த வருவாய் அதிகரிப்புகள். வாங்கிய கடனை எப்படி அடைப்போம், எப்போது அடைப்போம், அதற்கான திட்டமிடல்கள் என்ன என்று ஏதாவது இருக்கிறதா என்றால் அது எதுவும் இல்லை!
பன்னாட்டு சட்டக்கோட்பாடுகளில் ‘வெறுக்கத்தக்க கடன்' என்ற சொல் உண்டு. அதாவது நாட்டின் நலனுக்கு பலனளிக்காத நோக்கங்களுக்காக ஆட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் கடன் என்று இதற்கு பொருள் சொல்வார்கள். இத்தகைய சுயநல நோக்கங்களுக்காக வாங்கப்படும் கடனை நாட்டின் கடனாகச் சொல்லாமல், அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட கடன் என்றும் இதனைச் சொல்வார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் சுயநல நோக்கத்தோடு வாங்கப்பட்டவை தான் பழனிசாமி - பன்னீர்செல்வம் அண்ட் கோ வாங்கிய கடன்கள் என்று வரையறுக்க முடியும். இந்த லட்சணத்தில் ‘மேஜையைத் தட்டுங்க' என்கிறார் பன்னீர். மக்கள், தட்ட மாட்டார்கள். மக்கள் வாக்குச்சீட்டால் அடிக்கக் காத்திருக்கிறார்கள்!