அரசியல்

பணி மாறுதல், நியமனங்களில் கல்லா கட்டும் அதிமுக அமைச்சர்கள்.. இரவு பகலாக வாரிச் சுருட்டும் கொடுமை!

அதிமுகவின் ஆட்சி நிறைவுற இருப்பதால் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் கறை படிந்துள்ளதற்கு சாட்சியாக பணி மாறுதம், நியமனங்களில் அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கல்லா கட்டி வருகின்றனர்.

பணி மாறுதல், நியமனங்களில் கல்லா கட்டும் அதிமுக அமைச்சர்கள்.. இரவு பகலாக வாரிச் சுருட்டும் கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாளே உள்ளதால், புதிய பணி நியமனங்கள், பணி மாறுதல்கள் மூலம் அமைச்சர்கள் கடைசிக்கட்ட வசூல் வேட்டையில் ஈடுபட்டு கல்லா கட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக அரசு பணியிடங்களை நிரப்பும்போது, துறை சார்பில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே வேலைக்கு தேர்வு செய்வது வழக்கம்.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு துறை, பால்வளத்துறை, மின்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்துறை, வணிக வரித்துறை, மருத்துவத் துறை, தொழில்துறை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாகும் அலுவலக பணியாளர்களை எந்தவித தேர்வும் நடத்தாமல், நேரடியாக அமைச்சர்களே நியமிக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பணி நியமனம் எதுவும் நடத்த முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதிக பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக கூட்டுறவு துறையில் இதுபோன்று கடைசி கட்ட பணியிடங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என சுமார் 1000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குறிப்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலையீடு இதில் அதிகளவில் உள்ளது. இவர்கள், தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்கி உள்ளனராம். ஆனால், கூட்டுறவு துறை அமைச்சரோ, தன்னிடம் நேரடியாக பணம் வழங்கினால் மட்டுமே வேலை வழங்க முடியும் என்று கூறி, அவரது ஆதரவாளர்களை வைத்து பணம் வசூல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணி மாறுதல், நியமனங்களில் கல்லா கட்டும் அதிமுக அமைச்சர்கள்.. இரவு பகலாக வாரிச் சுருட்டும் கொடுமை!

இந்த பணி அரசு பணி அல்ல என்று தெரிந்தும், பலரும் ரேஷன் கடையில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று போட்டி போட்டு பணத்தை அமைச்சரிடம் கொடுத்து வருகிறார்கள். அவரும் வந்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டார். ஆனாலும், பணம் கொடுத்தவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் எந்த வேலையும் கிடைக்காது, கொடுத்த பணமும் கிடைக்காது என்ற ஏக்கத்தில் பணம் கொடுத்தவர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். அதேபோன்று, கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாதமும் அமைச்சர் ஊழல் செய்வதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும், கூட்டுறவு பயிற்சி பெற்ற 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களைத்தான், ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம்!

ஆனால், விதிமுறைகளை மீறி அரசு செயல்படுகிறது. ரேஷன் ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேங்மேன் பணியிடங்களுக்கு இது போன்று முறைகேடாக பணத்தை வாங்கிக் கொடுத்து ஆட்கள் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியதாக கூறப்படுகிறது. மின்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

ரேஷன் கடைகளுக்கு, பருப்பு கொள்முதல் செய்ததில் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் ஊழல் நடந்து வருகிறது. ரேஷன் கடைகளுக்கு, மாதம் 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கொள்முதல் செய்ய பல நிறுவனங்கள் முன் வந்தாலும், பன்னாட்டு நிறுவனத்திடம் கிலோவுக்கு தலா ரூ.10 வரை அதிகம் வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த அமைச்சருக்கு ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. பருப்பு மட்டுமல்ல எண்ணெய், குழந்தைகள் சாப்பிடுகிற முட்டையிலும் ஊழல் நடக்கிறது. தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வழங்க ஒரே நிறுவனத்தை மட்டுமே அரசு தேர்வு செய்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்திடம் வருமானவரித்துறை சோதனையே நடந்துள்ளது.

அப்படியென்றால் அந்த நிறுவனம் சார்பில் முட்டை சப்ளைக்கு துறை அமைச்சர் எவ்வளவு லாபம் பார்த்திருப்பார் என சிந்திக்க வேண்டும். மேலும் சமூகநலத் துறையில் பணியிடங்கள் நிரப்பவும், இடம் மாற்றம் செய்யவும் பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அமைச்சர் சரோஜா செயல்படுவதாக கூறப்படுகிறது. வசூல் வேட்டையில் அமைச்சரின் உறவினர்கள் இதுபோன்ற பணிகளை கவனிக்க, அமைச்சரின் கணவர் எப்போதும் அவருடனே இருந்து இதை கவனித்து வருகிறாராம். பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மேடைகளில் நேரடியாகவே, "இனி மேல், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லும் ஆட்களுக்குத் தான் அரசு வேலை வழங்கப்படும்’ என்று பேசுகிறாராம். இவரது துறையில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வசூல் வேட்டையில் அமைச்சரின் உறவினர்களே நேரடியாக இறங்குகிறார்கள். பலர் பணியிட மாற்றம் செய்வதற்காக பணம் கொடுத்து, இன்னும் ஆர்டர் வராமல் அமைச்சரின் வீட்டுக்கும், தலைமை செயலகத்துக்கும் நடையாய் நடந்து வருகிறார்கள்.

பணம் வழங்கினால் உடனே பட்டா!

ஆனாலும், அமைச்சர் கடைசி நேர வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கிறாராம். பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வருவாய்துறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தாலும் பட்டா கிடைக்காது. அமைச்சருக்குப் பணம் வழங்கினால் உடனடியாக பட்டா கிடைக்கிறதாம். சமீப நாட்களாக பட்டா மாற்றம் கேட்டு பணம் கொடுத்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க ஒரு சிலரை தனியாக நியமித்துள்ளாராம் அமைச்சர். இதன் மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் பல கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை வருவாய் துறை ஊழியர்களே பகிரங்கமாக கூறுகிறாரார்கள். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்.

அதன்படி, கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்ப ரூ. 5 லட்சம் ரூ.10 லட்சம் வரை அமைச்சரே நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆட்களை நியமித்து வருகிறார். சமீபத்தில் கூட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள இலை விபூதி போத்தி, தவில், தாளம், கோயில் அர்ச்சகர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், இளநிலை மின் பொறியாளர், உதவி மின் கம்பியாளர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நேரடி நியமனம்தான். இப்படி விண்ணப்பித்தவர்களிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் கல்லா கட்டப்படுகிறது. உள்ளாட்சி துறை சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் அல்லது புதிதாக அமைக்க வேண்டும் என்று போடாத விளக்குக்கும், நடப்படாத கம்பத்துக்கும் பில் போட்டு கல்லா கட்டப்படுகிறது.

உள்ளாட்சியில் உள்ள காலி பணியிடங்களிலும் பணம் வாங்கிக் கொண்டு வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடைசி கட்ட பணியிட மாறுதலுக்கு பல லட்ச ரூபாய் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போன்று, சுகாதாரத் துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்புவது, மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவர், பல் மருத்துவர், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த ஊழியர்களை நியமிக்கும் பணியில் துறை அமைச்சர் மும்முரமாக இருக்கிறாராம். அவரே நேரடியாக பணத்தை வாங்கிக் கொண்டு நியமனம் செய்து வருகிறார். இதில் துறை சார்ந்த யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம். இப்படி அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன், எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டி விட வேண்டும் என்று இரவு-பகல் பாராமல்கல்லா கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு நடந்த முயற்சியில் தான் மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரின் உதவியாளர் ஈடுபட்டு, தற்போது சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி - தினகரன் நாளிதழ்

banner

Related Stories

Related Stories