முரசொலி தலையங்கம் (126-12-2022)
சேது பாலமும் இரட்டை வேடமும் - 1
சேது சமுத்திரத் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தைச் செயல்பட விடாமல் தடுத்த பா.ஜ.க.வே இன்று. “ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது” என்று சொல்லி இருக்கிறது. 'பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி!' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
மாநிலங்களவையில் கார்த்திகேய சர்மா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த விண்வெளி மற்றும் அறிவியல் தொழிநுட் பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “பண்டைய காலம் பற்றிய தகவல்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி “ஹரப்பா நாகரிகம்” பற்றிய தகவல்களை கண்டுபிடித்துள்ளதாகவும்" தெரிவித்திருக்கிறார்.
“18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது. வரலாற்றின்படி 56 கிலோமீட்டர் நீளத்துக்கு பாலம் இருந்ததாக நம்பப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக காணப்படும் சுண்ணாம்புக்கல் திட்டுகளைக் கொண்டு சில முடிவுகளுக்கு வரக்கூடும்" என்றும் கூறிய அமைச்சர் ஜிஜேந்திர சிங்.
“ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்றும் தெரிவித்தார்.
அதாவது, ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாகக் கூறமுடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசே சொல்லி விட்டது. ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே உள்ள திட்டுகளை சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்ச சொச்சம் என்றோ கூற முடியாது என்று சொல்லிவிட்டது. இந்திய விண்வெளித்துறை செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்தது என்று துல்லியமாக கூறமுடியவில்லை என்றும் சொல்லிவிட்டது. அதாவது பா.ஜ.க. அரசே சொல்லிவிட்டது.
அவர்கள் இதுவரை எதைச் சொல்லி. சேதுசமுத்திரத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை எதிர்த்து வந்தார்களோ. அதற்கான பதிலை அவர்களே சொல்லி விட்டார்கள்.
தமிழர்களின் 150 ஆண்டு காலக் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தவர்களே இப்போது தாங்கள் சொன்னது பொய் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி 1967 ஆம் ஆண்டு சூலை 23 ஆம் நாளை 'எழுச்சி நாள்' என்று அறிவித்தார்கள். பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். மத்தியில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலமாக இத்திட்டத்தைச் செயல்படுத்த வைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள் 2004 ஆம் ஆண்டில். 2.427 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது அன்றைய ஒன்றிய அரசு.
சுப்பிரமணியசுவாமியும். ஜெயலலிதாவும் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வழக்குப் போட்டார்கள். 'சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்' என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி, நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசும் போது அறிவித்தார். இப்போது பா.ஜ.க. அரசே. அதற்காகச் சொல்லப்பட்ட காரணத்தை மறுத்துவிட்டது.
மன்னார் வளைகுடாவையும். வங்காள விரிகுடாவையும் இணைத்து ஆதம் பாலம் வழியாக இந்தியக் கடல் பரப்பில் ஒரு கடல் பாதையை உருவாக்குவதுதான் சேதுசமுத்திரத் திட்டம் ஆகும். இதனை அமைத்தால் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கரைகளுக்குச் செல்ல வேண்டிய கப்பல்கள் இலங்கைக்குச் செல்லாமல் நேரடியாகச் செல்லலாம். இதனால் இந்திய வர்த்தகம் என்பது மிகமிக எளிதாகும்.
சேதுசமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழாவில். (2.7.2005) பேசிய தலைவர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தின் பயன்களை விரிவாக விவரித்தார்கள். "நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும். தமிழகத்திலே தொழில் வணிகம் பெருகும். கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும். தமிழகம் மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும். சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். சேதுக் கால்வாய் திட்டத்தின் கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள், வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம் வாழ்க்கைத் தரம் உயரும். மீனவர்களுடைய பாது காப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன.
மன்னார் வளைகுடாவில் இருந்து பாக். கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காய் பல நன்மைகளை விளக்கினார்கள்.
ஆனால் இவை அனைத்தும் மதவாத சக்திகளின் விதண்டா வாதங்களுக்கு முன்னால் பலரது காதுகளுக்குக் கேட்கவில்லை. 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு ராமர் பாலம் கட்டப்பட்டது, அதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பதை ஆதாரங்களற்று திரும்பத் திரும்பச் சொல்லி திசை திருப்பிக் கொண்டு இருந்தது ஒரு கூட்டம்.
- தொடரும்