மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.12.2022) சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்" இங்கே நம்முடைய ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர், அதாவது என்னுடைய தமிழ் ஆசிரியராக இருந்த திரு.ஜெயராமன் அவர்கள் என்னை வாழ்த்தி பேசுகிறபோது, "உன்னை மாணவனாகப் பெற்றதில் நாம் பெருமை அடைகிறோம்" என்று சொன்னார். நீங்கள் மாணவனாக பெற்றதில் எப்படி பெருமை அடைந்தீர்களோ, உங்களிடத்திலே நான் தமிழ் பாடத்தை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். தமிழைக் கற்றுக் கொள்ளக்கூடிய, தமிழைப் பயிலக் கூடிய வாய்ப்பை மட்டும் நீங்கள் தரவில்லை; சாதாரணமாக நீங்கள் சொல்லித் தரவில்லை. அடித்து, அடித்து சொல்லி கொடுத்தீர்கள். அதுதான் எனக்குப் பெருமை. அப்படிப்பட்ட நிலையில்தான் நான் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்பதிலே பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சி.எம்-ஆக இங்கே வரவில்லை. நான் ஒரு ஸ்டூடண்ட்டாகத்தான், உங்களுடைய பழைய ஃபிரண்ட்-ஆகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.
மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன். இந்தப் பள்ளியில் நான் படிக்கிறபோது நம்முடைய தமிழ் ஆசிரியர் அய்யா ஜெயராமன் அவர்கள் சொன்னது போல, என்னுடைய அப்பா அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகுதான் முதலமைச்சராக ஆனார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரே சொன்னார், நான் எந்த பந்தாவும் இல்லாமல், ஒரு அமைச்சருடைய மகனாக நான் நடக்கவில்லை. நான் மட்டுமல்ல, என்னுடைய தலைவர் என்னுடைய தந்தையும் அப்படி நடப்பதை விரும்ப மாட்டார். இதெல்லாம் என் கூட படித்தவர்களுக்கு தெரியும். ஆசிரியருக்கே தெரிந்திருக்கிறது. அப்படி என்றால், மாணவர்களுக்கு நிச்சயமாக தெரியும். இன்னும் சொல்லவேண்டுமென்றால், நான் கோபாலபுரத்தில் இருந்தபோது இங்கேகூட வீடியோவில் காட்சி வந்தது. அந்த பழைய ஸ்டூடண்ட் பேர் எல்லாம் வந்தபோது என்னுடைய அப்பாவின் பேரையும் போட்டு, முகவரியும் போட்டிருந்தார்கள். 7ஏ, 4th Street, கோபாலபுரம். அதையும் பார்த்தேன். அந்த கோபாலபுரத்தில் இருந்தபோது, நான் அமைச்சருடைய மகனாக இருந்த நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு நான் பஸ்ஸில் தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன்.
வீட்டிலிருந்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரி வரைக்கும் நடந்து வந்து 29சி என்கிற பல்லவன் போக்குவரத்து கழக பஸ்ஸை பிடித்து, அந்த பஸ்ஸில் ஏறி, ஸ்டெர்லிங் ரோடில் வந்து இறங்கி, ஸ்டெர்லிங் ரோட்டிலிருந்து ஸ்பர்டாங் ரோட்டிற்கு நடந்து வரவேண்டும். குறைந்சபட்சம் ஒரு 3 அல்லது 4 கிலோமீட்டர் இருக்கும். அங்கிருந்து நடந்துதான் வருவேன். அதெல்லாம் பழைய நினைவு. அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு.
அதேமாதிரி தான் இப்போதும் இங்கே நான் முதலமைச்சராக வரவில்லை என்று சொன்னேன். உங்கள் நண்பராகத் தான் வந்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், செக்கியூரிட்டி எல்லாம் மட்டும் இல்லையென்றால், அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றால், நிச்சயமாக நான் பஸ்ஸிலேயோ சைக்கிளிலோ இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன். ஆனால், செக்கியூரிட்டி விட மாட்டார்கள். அது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் உங்களோடு பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
இங்கே இருக்கக்கூடிய சிலர் முகத்தை எல்லாம் பார்க்கிறபோது, சில ஆசிரியர்களை பார்க்கிறபோது, குறிப்பாக நம்முடைய தமிழாசிரியர் திரு. ஜெயராமன் அவர்களை பார்க்கிறபோது ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்கிற பாட்டுதான் என் ஞாபத்திற்கு வருகிறது. இப்போது எனக்கு அதை பாட வேண்டும் போல ஆசை. உலகத்திலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கடந்தகால இனிமையான நினைவுகள் தான். ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இதுபோன்ற ஞாபகங்கள்தான்.
எனக்கு இந்த வளாகம் மிக மிக மகிழ்ச்சியான ஞாபகமாக இருக்கிறது. அரசியலுக்கு வருவேன் என்றும், ஒரு இயக்கத்தினுடைய தலைவராக வருவேன் என்றும், அதுவும் குறிப்பாக இந்த மாநிலத்திற்கு முதலமைச்சராக வருவேன் என்று நானும் நினைத்துப் பார்க்கவில்லை, நீங்களும் நிச்சயமாக நினைத்து இருக்க மாட்டீர்கள். ஆனால் அது நடந்திருக்கிறது. இப்படி ஒரு பெரிய அளவுக்கு நான் உயர்ந்து வந்ததற்கு இந்தப் பள்ளியும் ஒரு காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். நிச்சயமாக இந்த பள்ளியும் ஒரு காரணம்தான் அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ டாக்டர்கள் வந்திருப்பார்கள். பொறியாளர்கள் வந்திருப்பார்கள். வழக்கறிஞர்கள் வந்திருப்பார்கள். ஆனால் முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதில் எனக்கும் பெருமை தான்" எனக் கூறினார்.